பௌத்த சமயம் மற்றும் சிங்களம், இலக்கியம் போன்ற பாடங்களில் A சித்தி பெற்ற முஸ்லிம் மாணவன்!

கொழும்பு லும்பினி மகா வித்தியாலயத்தின் மாணவரான அளுத்கம தர்கா நகரில் வசிக்கும் முகம்மட் ரிப்கான் முகமட் அர்மாஷ் பௌத்த சமயம் மற்றும் சிங்களம், சிங்கள இலக்கியம் போன்ற பாடங்களில் A பெறுபேற்றை பெற்றுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்தியை பெறுவது ஒரு மாணவனினதோ மாணவியினதோ உயர் திறமையாகும். அதனால்தான் ஒவ்வொரு முறையும் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்தவுடன் அவ்வாறான திறமையாளர்கள் பாராட்டப்படுகின்றார்கள்.

அவர்களிலும் சமூகத்தால் பேசப்படும் அதி திறமைசாலிகள் உள்ளார்கள்.இதுவும் அவ்வாறான ஒரு திறமைசாலியின் கதையாகும்.

அவர் இம்முறை கா. பொ. த. சாதாரணதரப் பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்ற கொழும்பு லும்பினி மகா வித்தியாலயத்தின் மாணவரான அளுத்கம தர்கா நகரில் வசிக்கும் முகம்மட் ரிப்கான் முகமட் அர்மாஷ் ஆவார்.

Sinhala-A-Sinhala Lit-A-Buddhism-A-9A-பௌத்தம் - A; சிங்களம் - A; சிங்கள இலக்கியம் - A

வர்த்தகரான எம். கே. எம். ரிப்கான் மற்றும் எம். கே. ரிபாஷாவின் குடும்பத்தின் மூன்று புதல்வர்களில் மூத்த புதல்வர் ஆவார்.

இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மாணவன் முஹம்மட் அர்மாஷின் விசேட திறமை என்னவென்றால் பௌத்த சமயத்திற்கும் மற்றும் சிங்களம், சிங்கள இலக்கியம் போன்ற பாடங்களுக்கு ஏ பெறுபேற்றை பெற்றமையாகும்.

அவர் தமது வெற்றியை பற்றி கூறியதாவது,

“நான் ஆரம்பக்கல்வியை அலுத்கம தேசிய பாடசாலையில் சிங்கள மொழி மூலம் கற்றேன்.ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து நான் கொழும்பு லும்பினி மகா வித்தியாலயத்திற்கு சென்றேன். அங்கு நான் ஆங்கில மொழி மூலம் எனது கல்வியைத் தொடர்ந்தேன். இம்முறை கா. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் பௌத்த சமயம், சிங்கள மொழி மற்றும் இலக்கியம் போன்ற பாடங்கள் உட்பட ஒன்பது பாடங்களுக்கு ஏ தர பெறுபேற்றை பெற்றதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது தந்தை பௌத்த பாடசாலை ஒன்றில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்றுள்ளார். அப்பாடசாலை மாலேவன ஸ்ரீ ஞானிஸ்ஸர கல்லூரியாகும். அந்த சூழலும் எனக்கு இந்த வெற்றியை பெற காரணமாக அமைந்தது.

லும்பினி மகாவித்தியாலயத்தின் பௌத்த சமய பாடத்திற்கு பொறுப்பான வணக்கத்துக்குரிய கெடமானே திஸ்ஸ தேரரருக்கும் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் குழுவினருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். க.பொ. த. உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வியை மேற்கொண்டு பொறியியலாளராகி நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட விரும்புகின்றேன்.”

முஹம்மத் அர்மாஷின் தந்தை கூறியதாவது,

“நான் மாலேவன ஞானிஸ்ஸர கல்லூரியில் கற்றவன் என்ற ரீதியில் எனது மகன் பெற்ற இந்த வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.இது தேசிய மத ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். எனது மகன் வலுவான அடித்தளம் ஒன்றை இட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது.”

முகம்மட் அர்மாஷின் தாயார் கூறியதாவது,

“எனது மகன் பௌத்த சமயத்துக்கு’ ஏ’ பெறுபேற்றை பெற்றது இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். எனது மகன் ரமழான் காலத்திலும் தனது கல்வியை தொடர்ந்து மேற்கொண்டார். அவர் இஸ்லாம் கல்வியையும் சிறப்பாக கற்றவர். எல்லா மதங்களிலும் வாழ்க்கையை நல்ல விதமாக மேற்கொள்ளவே கற்பிக்கப்படுகின்றது. அதனை எனது மகன் நன்கு புரிந்து கொண்டவர்.எனது ஏனைய புதல்வர்களும் கொழும்பு லும்பினி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கிறார்கள். லும்பினி மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

“நான் முஸ்லிமாக இருந்தாலும் எனது பாடசாலையில் என்னை யாரும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அவர்கள் என்னை சகோதரனாகவே எண்ணினார்கள். நாம் மற்ற மதங்களைப் பற்றி கற்பதால் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படாது.”

சுனில் ஸ்டான்லி
(தமிழில்: வீ.ஆர்.வயலட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *