கடைசி வரை நிறைவேறாத நடிகர் சிவாஜி கணேசனின் ஆசை!

தனது நடிப்பாலும் கதா பாத்திரங்களாலும், வசனங்களாலும் அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் இடம்பிடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இன்று அவரது 93-வது பிறந்தநாள் ஆகும் . இந்த நிலையில் இன்று அவரை சிறப்பிக்கும், வகையில் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது.

மேடை நாடகத்தில் அதீத ஆர்வம் கொண்ட சிவாஜி கணேசன் நடித்த முதல் நாடகத்தின் பெயர் ‘இராமாயணம்’. அதில் சீதை வேடத்தில் நடித்தார் சிவாஜி அவர்கள். கணேச மூர்த்தியாக இருந்த அவர் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ மூலம் , ‘சிவாஜி’ கணேசனாக மாறிய பிறகு அவரது முதல் திரைப்படமான ‘பராசக்தி’ 1952-ல் வெளியானது.

கலைஞர் வசனத்தில் நீதிமன்ற கூண்டில் நின்று சிவாஜி பேசும் வசனங்கள் அறிமுக படத்திலேயே அவருக்கான பெரும் முத்திரையாக அமைந்தன. ‘பராசக்தி’, ‘பாசமலர்’, ‘கர்ணன்’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘மனோகரா’ என இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் இவரது நடிப்புத் திறனுக்கான சான்று.

அதிலும், சமீபத்தில் ‘கர்ணன்’ படம் வெளிவந்து 48 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலாக திரையரங்குகளில் மறுவெளியீடு செய்திருந்த போதும் ரசிகர்களிடையே கர்ணன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக 1962-ம் வருடம் சிவாஜி கணேசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, நயாகரா மாநகரத்தின் ஒரு நாள் மேயராக அறிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டிருந்தமை பெருமைக்குரியது.

அத்துடன் எகிப்து நாட்டின் அரசர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வந்த போது அவரை வரவேற்று உபசரிக்க இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான். யானை மீது அலாதி பிரியம் கொண்ட சிவாஜி கணேசன் திருப்பதி, திருவானைக்காவல், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில்களுக்கு யானைகளை கொடுத்துள்ளார்.

கலைமாமணி விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷன், செவாலியே விருது, தாதா சாஹிப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் சிவாஜி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , பெருந்தலைவர் காமராஜர் மீது அதீத பிரியம் கொண்டவர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் இருந்து ‘இராமயண’த்தின் சீதை, ‘மகாபாரத’ கர்ணன் என பல வேடங்களை ஏற்று நடித்துள்ளார். ஆனால், நடிகர் திலகம் நடிக்க விரும்பிய கதாப்பாத்திரம் எது தெரியுமா? இவருக்கு ‘சிவாஜி’ என்ற பெயர் கொடுத்த தந்தை பெரியாருடைய வேடம்தான் அது. ஆனால், கடைசி வரை அவரது அந்த ஆசை நிறைவேறவில்லை என கூறப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *