எதிர்காலத்தில் இலங்கையில் ஓய்வூதியம் வழங்க பணம் இருக்காது!

2035ம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதற்கு நாட்டில் பணம் இருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக ஆர்வலர்களுடன் இன்று சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட நெருக்கடியை மட்டுமே ஏனைய நாடுகள் எதிர்கொள்கின்றன. ஆனால் கோவிட் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியுடன் நாமே உருவாக்கிய நெருக்கடி இரண்டுமே நாட்டில் உள்ளது.

மற்ற நாடுகளில் அந்நிய செலாவணி கையிருப்பு குறையவில்லை. எனினும், நாங்கள் நேபாளத்துக்குக் கீழே இருக்கிறோம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஓய்வூதியம் வழங்க 2035க்குள் அரசிடம் பணம் இருக்காது. இன்று நாட்டுக்கு அந்நிய செலாவணி இல்லை. உள்ளூர் வருமானம் இல்லை. முன்பு இதுபோன்ற சூழ்நிலை இல்லை.

மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதமாக இந்த ஆண்டிற்கான கடன் 108 சதவிகிதம் அமைந்துள்ளது. எனினும் நாங்கள் நாட்டை ஒப்படைத்தபோது அது 88.6 ஆக இருந்தது.

நாங்கள் அரசாங்கத்தை ஒப்படைத்துவிட்டு சென்றபோது ஏழரை பில்லியன் டொலர்கள் இருப்பு இருந்தது. கூடுதலாக, டொலர் இருப்புக்களில் இரண்டரை பில்லியன் இருந்தன. இன்று கையிருப்பில் இரண்டு பில்லியன் டொலர்கள் மட்டுமே உள்ளன.

நாங்கள் செய்தது பொருளாதாரத்தை மறுசீரமைத்து கடன் சுமையை குறைப்பதாகும். சம்பளத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல் முதலீட்டாளர்களுக்கு தேவையான சூழலை மேம்படுத்தினோம்.” என அவர் கூறியுள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *