நீல நிற ஜாவா வாழைப்பழம்!

வாழைப்பழம் என்றால் மஞ்சள் வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், செவ்வாழை பார்த்திருப்போம், சாப்பிட்டிருப்போம். வாழைப்பழங்கள் மிகவும் சத்தானதாக இருப்பதால் உலகம் முழுவதும் பிரபலமானவை.

ஆனால், தற்போது மஞ்சள் வாழைப்பழங்களைப் பற்றி பேசவில்லை. சமீப நாட்களில் ஒரு புதிய வகை வாழைப்பழங்கள் பேசப்படுகின்றன. ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.

அவை, ப்ளூ ஜாவா என்று அழைக்கப்படும் நீலநிற வாழைப்பழங்கள் தான். இந்த வாழைப்பழங்களின் தோல் நீலநிறத்திலும் உள்ளே கிரீமி அமைப்பைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ப்ளூ ஜாவா

இந்த வாழைப்பழத்தின் ஸ்பெஷல் அதனின் தனித்துவமான நிறம் மற்றும் அமைப்பு மட்டுமல்ல, அதன் சுவையும் தான். ஆம், வெண்ணிலா போன்ற சுவை இருப்பதாக அந்த வாழைப்பழங்களை சாப்பிட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால் இவை இனிப்புகளுக்கு ஒரு அற்புதமான தேர்வை கூட செய்கின்றன.

இருப்பினும், இந்த வாழைப்பழங்கள் மிகவும் அரிதானவை, அவை எல்லா இடங்களிலும் கிடைக்கவில்லை. அவை முதன்மையாக தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் வளர்க்கப்படுகின்றன, ஆனால் அவை ஹவாயிலும் இருக்கின்றன.

இந்த பழங்கள் மூசா பால்பிசியானா மற்றும் மூசா அக்யூமினாட்டா ஆகிய இரண்டு வகையான வாழைப்பழங்களின் கலப்பினமாகும். சுவாரஸ்யமாக இந்த வாழைப்பழங்கள் குளிர்ச்சியைத் தாங்கும் மற்றும் உறைபனிக்குக் கீழே வெப்பநிலையில் கூட வளரக்கூடியவை. அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ற வெப்பநிலை 40 எஃப் ஆகும்.

ப்ளூ ஜாவா

இந்த வாழைப்பழங்கள் பழுத்தவுடன், அவை பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தைக் கொண்டிருக்கும். இந்த வாழைப்பழம் பற்றி பல்வேறு நபர்கள் தற்போது பேசி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். டுவிட்டர் பயனாளர் Tham Khai Men என்பவர்,

“ப்ளூ ஜாவா வாழைப்பழங்களை நடவு செய்ய யாரும் என்னிடம் சொல்லவில்லை? நம்பமுடியாதவை! வெண்ணிலா ஐஸ்கிரீம் போலவே சுவையை தருகின்றன,” என்று கூறியிருக்கிறார். இதேபோல் இந்த வாழைப்பழத்தின் சுவையை குறித்து புகழ்ந்து வருகின்றனர்.

சுவை மட்டுமல்ல, இந்த வாழைப்பழங்களில் மற்ற வகை வாழைப்பழங்களைப் போலவே நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின்கள் சி மற்றும் பி 6 ஆகியவை நிறைந்துள்ளன. இதனுடன் சேர்த்து, சில அளவு இரும்பு, பாஸ்பரஸ், தியாமின் மற்றும் செலினியம் ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *