கொரோனாவால் இரு மடங்காகும் மாரடைப்பு மரணங்கள்!

இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கொரோனா பெருந்தொற்று அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்துவதாக 2021 மார்ச் மாத உலக சுகாதார மையத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

இதை உறுதி செய்யும் விதமாக விளக்கம் அளித்துள்ளார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சைக்கான மூத்த மருத்துவர் டாக்டர் ஆறுமுகம்.

இந்தப் பெருந்தொற்று காலத்தில் மாரடைப்பினால் இறப்போரின் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளது எனக் கூறியுள்ளார் அவர்.

கொரோனா தொற்று விளைவுகள் குறித்து விளக்கமளித்துள்ள டாக்டர் ஆறுமுகம், “கொரோனா பெருந்தொற்று, நுரையீரலுக்கு அடுத்தபடியாக இதயத்தை பாதிக்கிறது.

பெருந்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து குணமாகிய நோயாளிகளில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேருக்கு ஏதோ ஒரு வகை இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்படுகிறது.

இத்தொற்று நுரையீரலில் ஃபைப்ரோசிஸ் என்ற பிரச்சினையை ஏற்படுத்துவதை போலவே இதயம், கல்லீரல், கணையம் போன்ற மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது.

இதயத்தைப் பொறுத்தவரையில் அது இதயதசைகளில் அழற்சியை ஏற்படுத்தி மயோகார்டைட்டிஸ் என்ற பிரச்சனையை உருவாக்குகிறது.

இதனால் இதயத்துடிப்பில் மாற்றங்களும் மாரடைப்பும் ஏற்படலாம். ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயத்துடிப்பில் ஏற்றக் குறைவு உள்ளவர்கள், ஏற்கனவே இதய செயலிழப்பு உள்ளவர் போன்றோருக்கு கொரோனா தொற்றுக்கு பிறகு இதயத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படுகிறது.

மாரடைப்பினால் இறப்போரின் எண்ணிக்கை இந்தப் பெருந்தொற்று காலத்தில் இரு மடங்காகி உள்ளது. பொதுவாக முன்பெல்லாம் நாலு பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் மூன்று பேர் காப்பாற்றப்படுவார்கள். ஆனால் தற்பொழுது இரண்டு பேரை மட்டுமே காப்பாற்ற முடிகிறது.

எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நலமாக வீடு திரும்பினாலும் அவ்வப்பொழுது இதயநோய் வல்லுனரை பார்த்து பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

நுரையீரலில் ஏற்படும் ஃபைப்ரோசிஸ் என்ற பிரச்சினையும் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி சில காலங்களில் மாரடைப்புக்கும் வழிவகுக்கலாம்.

இதயம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை முறையான பரிசோதனைகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதால் போதிய இடைவெளியில் இதயநோய் மருத்துவரை சந்தித்து உடல் நலத்தை பரிசோதித்துக் கொள்வது இந்த ஆபத்தை தவிர்க்க உதவும்” எனக் கூறுகிறார்.

– நன்றி: தினத்தந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *