மாரடைப்பால் இன்சமாம் வைத்தியசாலையில் அனுமதி!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 51 வயதான இன்சமாம் உல் ஹக், கடந்த 1992ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தார்.

இதன்படி ,வலதுகை துடுப்பாட்ட வீரரான இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகமான ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளார். 375 ஒருநாள் போட்டிகளில் 11,701 ஓட்டங்களும், 119 டெஸ்ட் போட்டிகளில் 8,829 ஓட்டங்களும் அவர் சேர்த்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கடந்த 2007ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக உல் ஹக் அறிவித்தார். பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை வகித்துவந்துள்ளார். துடுப்பாட்ட ஆலோசகர், தேர்வுக்குழுத் தலைவர் என பல பதவிகளில் இருந்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கான பயிற்சியாளராகவும் இன்சமாம் உல் ஹக் செயல்பட்டுள்ளார்.

மேலும் ,இந்தநிலையில், கடந்த 3 நாட்களாக லேசான நெஞ்சு வலி இருப்பதாகத் தெரிவித்து வந்துள்ளார். ஆனால், நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர், லாகூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இன்சமாம் உல் ஹக்கிற்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்குப் பின் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. அதனையடுத்து இன்சமாம் உல் ஹக் உடல்நிலை விரைவாக குணமடைய வேண்டும் என்று பலர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *