நீண்டுகொண்டே செல்லும் 367 அடி ஆழமான அதிசயக் கிணறு!

யெமன் நாட்டில் உள்ள அல்மாரா பாலைவனத்தின் நடுவே 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய அதிசய கிணறு உள்ளது. இந்த கிணறை அப்பகுதி மக்கள் பர்ஹட்டின் கிணறு என அழைக்கின்றனர்.

இந்தக் கிணற்றிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதால் அதில் பூதம் இருப்பதாக வதந்தி பரவியது.

இதனை நரகத்தின் கிணறு எனவும் அதற்கான வழி எனவும் கட்டுக்கதைகள் சொல்லப்பட்டு வந்த நிலையில் ஓமன் நாட்டின் குகை பயணக் குழுவைச் சேர்ந்த 10 ஆய்வாளர்கள் குழு, இந்த மர்ம குழி பற்றி ஆய்வு செய்ய முடிவு செய்தது.

இந்நிலையில், ஆய்வு குழுவினர் குழியில் உரிய உபகரணங்களுடன் எவ்வித தயக்கமுமின்றி தைரியமாக‌ கிணற்றின் உள்ளே இறங்கினர்.

இதுதொடர்பாக ஆய்வுக்குழு தலைவர் கூறுகையில், இந்தக் கிணறு குகைபோல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்று இருக்கிறது.

மேலும் அதிகமான பாம்புகள், இறந்த விலங்குகள் மற்றும் குகை முத்துக்கள் இருக்கின்றன. இங்கு எந்த பூதமும் இல்லை என தெரிவித்தார்.

பறவைகள், விலங்குகள் அதிகமாக இறந்து கிடப்பதாலேயே துர்நாற்றம் வீசுகிறது. இது பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பழமையானது என மதிப்பிட்டுள்ளோம்.

இந்த கிணறு யெமன் நாட்டிற்கான ஒரு புதிய வரலாற்றை எழுதும் என நம்புகிறோம். தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டார்.

சூரிய ஒளி கூட கிணற்றின் சில அடிகள் வரை மட்டுமே தொடுகிறது என்பதால் இருளாகவே தோன்றும் இந்த அதிசய கிணறு உள்ளே என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே இருந்த நிலையில் தற்போது ஆராய்ச்சியில் வெட்டவெளிச்சமாகி உள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *