மணிக்கு 120 கிலோ மீட்டரில் பயணிக்கும் பறக்கும் கார் 2023 இல் பாவனைக்கு!

சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று ’பறக்கும் கார்’ மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடலை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆய்வு செய்திருக்கிறார். பின்னர், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு செய்த அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,

“விரைவில் ’ஆசியாவின் முதல் பறக்கும் கார்” ஆக மாறும் கான்செப்ட் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பயன்பாட்டுக்கு வந்தால் பறக்கும் கார்கள் மக்களையும் சரக்குகளையும் கொண்டு செல்லவும், மருத்துவ அவசர சேவைகளை வழங்கவும் பயன்படும். பறக்கும் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்,” என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருந்தார்.

’வினதா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹைபிரிட் பறக்கும் கார் மாடல் ’வினதா ஏரோமோபிலிட்டி’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யோகேஷ் ஐயர், ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அதன் அர்த்தம் ‘அனைத்துப் பறவைகளின் தாய்’ என்றும் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் பறக்கும் கார் தொடர்பான ஆய்வில் இருக்கிறோம். எனவே நாங்கள் நிறைய ஆராய்ச்சி செய்து ’வினதா’ எனப் பெயரிட்டோம். வினதா பண்டைய புராணத்திலிருந்து வந்தது. ’பறவைகளின் தாய், துல்லியமாக, கருடனின் தாய்’ என்பதே இதன் பொருள்,” என்று கூறியுள்ளார்.
பறக்கும் கார் கான்செப்ட், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு முன்மாதிரியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் சிறப்பம்சங்களை பார்க்கும்போது, பறக்கும் காரில் எட்டு கோஆக்சியல் ரோட்டர்கள் மற்றும் உயிரி எரிபொருள் மற்றும் பேட்டரியில் இயங்கும் ஒரு ஹைபிரிட் மோட்டார் இருக்கிறது.

கர்ப் எடை 900 கிலோவாக 250 கிலோ சுமை திறன் கொண்டது. 120 கிலோ மீட்டரை ஒருமணி நேரத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

”பறக்கும் கார் இரண்டு இருக்கைகள் கொண்டதாக இருக்கும். உயிர் எரிபொருளில் VTOL (வெர்டிகல் டேக்ஆஃப் மற்றும் லேண்டிங்) திறனுடன் இயங்கும். அதை எங்கும் தரையிறக்கலாம் மற்றும் புறப்படலாம்,” எனக் கூறும் அதன் சிஇஓ, ஹெலிடெக் எக்ஸ்போவுக்குப் பிறகு பறக்கும் காருக்கான தயாரிப்பு தொடக்கப்படும் என்றும், 2023க்குள் சோதனை ஓட்டம் நடக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *