நிர்வாண மகப்பேறு புகைப்படத்தால் குவியும் பாராட்டும் சர்ச்சைகளும்!

மகப்பேறு என்பது சந்தோஷமாக, கொண்டாடப்பட வேண்டிய மற்றும் வாழ்வின் முக்கிய மகிழ்ச்சியான தருணங்களை தன்னுள் அடக்கியுள்ள ஒரு காலமாகும். அவற்றை புகைப்படமாக்குவதை தவிர்த்து வேறுவழியுண்டோ?

வாழ்வின் ‘அம்மா-அப்பா’ எனும் அத்தியாத்துக்குள் அடியெடுத்து வைக்கவிருக்கும் அம்ருத் பாபா மற்றும் ஜான் பிரெஞ்ச் தம்பதியினர், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஒரு அழகிய நதிக்குள் நிர்வாண மகப்பேறு போட்டோஷூட் நடத்தி அவர்களது கர்பகாலத்தை பதிவுசெய்துள்ளனர். நதியின் மையத்தில் நின்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்தவர் கேரளாவைச் சேர்ந்த 28 வயதான பெண் புகைப்படக் கலைஞர் ஆதிரா ஜாய்.

வயநாட்டைச் சேர்ந்த ஆதிரா, கணவர் மற்றும் குழந்தையுடன் கோட்டையத்தின் வைகோமில் வசித்துவருகிறார். நிர்வாண போட்டோஷூட் என்பது ஒவ்வொரு புகைப்படக் கலைஞரின் கனவு என்று தி வீக் பத்திரிக்கையிடம் பகிர்ந்த ஆதிரா, பிரெஞ்சு தம்பதிகளின் மகப்பேறு தருணங்களை புகைப்படமெடுக்க தீர்மானித்தவுடன், புகைப்படங்களில் அவரது தனித்துவமான முத்திரையை பதிக்க விரும்பியுள்ளார்.

இதற்கு முன்னதாக கேரளாவில் நிர்வாண மகப்பேறு போட்டோஷூட்கள் எடுக்கப்பட்ட போதிலும், அவைகள் அனைத்தும் உள்அரங்குகளிலே எடுக்கப்பட்டன என்கிறார் ஆதிரா. உண்மையில், ஆதிரா வெட்டவெளியில் நிர்வாண மகப்பேறு போட்டோஷூட் எடுப்பதற்காக மாடல்களைத் தேடி கொண்டிருந்த சமயத்தில், அம்ருத் பாபாவும் ஜானும் அவருக்கு மாடலாக கிடைத்தனர்.

தம்பதியினர் அதிராவினுடைய கணவரின் நண்பர்கள். நிர்வாண மகப்பேறு போட்டோஷூட் யோசனையைப் பகிர்ந்த ஆதிரா, இணையத்தில் கிடைத்த சில புகைப்பட மாதிரிகளை தம்பதியினரிடம் காட்டியுள்ளார். அதற்கு அவர்களும் சம்மதித்துள்ளனர்.

மாடல்கள் ரெடி. ஐடியா ரெடி. ஆனால், புகைப்படம் எடுப்பதற்கான சரியான லோகேஷனை கண்டவறிவது எளிதானதாக அமையவில்லை. படப்பிடிப்புக்காக தங்கும்விடுதிகள் மற்றும் ஹோம் – ஸ்டே போன்ற இடங்களை அணுகினாலும், தம்பதியினருக்கான பிரைவேசி மற்றும் பாதுகாப்பை ஆதிராவினால் உறுதி செய்யமுடியவில்லை.

தனது கனவு புரோஜெக்ட் நிறைவேறாது என்ற வருத்தத்திலிருந்த அவருக்கு மற்றொரு ஐடியா கிடைத்தது. கோழிக்கோட்டின் கோடெஞ்சரியில் உள்ள ஒரு ஆற்றில் போட்டோஷூட் நடத்தும் எண்ணம் தோன்றி உள்ளது. அதற்குத் தேவையான அனுமதியும் பெறப்பட்டது. திட்டமிட்டபடி படப்பிடிப்பும் முடிந்து அம்ருத் மற்றும் ஜானுக்கு அவர்களது புகைப்படங்கள் மனதுக்கு நெருக்கமான ஒன்றாகின.

அப்புகைப்படங்களை ஆதிரா அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட ஒரு சிலர் படப்பிடிப்பு ஆட்சேபகரமானதாக தெரிவித்ததுடன், சிலர் ரிப்போர்ட் செய்ததை அடுத்து ஃபேஸ்புக் புகைப்படங்களை நீக்கியது. புகைப்படங்களை தடை செய்வதற்கான நடவடிக்கையின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை என்று கூறினார் ஆதிரா.

ஆனால் ஊக்கம் நிறைந்த பாராட்டு வார்த்தைகள் முழுமையாய் கிடைத்தவண்ணம் உள்ளன என்றார். பலர் தனக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறிய அவர், சிலர் தொலைபேசியில் தொடர்புகொண்டு போட்டோஷூட் யோசனை மற்றும் புகைப்படங்களால் அவர்கள் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்ததாக கூறினார்.

மேலும், அவர்களில் சிலர் தனது வேலையைப் பாராட்ட அவரது வீட்டிற்குக்கூட வந்ததாக கூறி மகிழ்ந்தார் ஆதிரா. டெல்லியின் ஐ.ஐ.பியில் புகைப்பட பட்டத்தை முடித்த அதிரா

“நான் இதுவரை எந்த எதிர்மறையான விமர்சனங்களுக்கும் பதிலளிக்கவில்லை. ஆனால், விமர்சனத்தை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தேன்,” என்று தி வீக்-யிடம் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கும் பொருட்டு அவர் மற்றொரு தனித்துவமான போட்டோஷூட்டை முடித்துள்ளார். இருப்பினும், அது கவனிக்கப்படாமல் போனது என்றார். இதற்கடுத்து எடுக்கப்பட்ட நிர்வாண மகப்பேறு போட்டோஷூட்சமூக வலைதளங்களில் வைரலாகி எதிர்ப்பையும் ஆதரவையும் பெற்றுவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *