இணையத்தில் அதிகம் தேடப்படும் நபராக மாறியுள்ள சினேகா துபே!

ஐநா மன்றத்தில் இந்திய தரப்பில் தனது வாதத்தை முன்வைத்த மன்றத்தின் இந்திய முதன்மை செயலாளர் சினேகா துபே, இணையத்தில் அதிகம் தேடப்படும் நபராக மாறியுள்ளார். இவரது ஐநா மன்ற உரை இந்தியர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐநா மன்ற பொதுச்சபைக் கூட்டத்தில், பாகிஸ்தான் நாட்டிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய முதன்மை செயலாளர் சினேகா துபே பேசியுள்ளார்.

அவரது உரையில், “ஐநா மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் பாகிஸ்தான் குறித்து நன்கு அறியும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பயிற்சியளிக்கும் கொள்கையை வைத்திருப்பது உலகறியும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து அடைக்கலம் கொடுத்த வரலாறு பாகிஸ்தானுக்கு உண்டு” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அண்மையில் நினைவுகூர்ந்ததை குறிப்பிட்டு, அத்தாக்குதலுக்கு பின்புலமாக இருந்த ஒசமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான்தான் எனவும், இன்றளவும் பாகிஸ்தான் தலைவர்கள் ஒசாமா பின்லேடனை தலைவராக உருவகப்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.இவரது இந்த பேச்சு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலானது. இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு சினேகா சரியான பதிலடி கொடுத்துள்ளார் என்று கொண்டாடி வருகின்றனர்.

யார் இந்த சினேகா துபே?

கோவாவில் தனது பள்ளிப்படிபை முடித்த சினேகா துபே, புனே பெர்குசன் கல்லூரியில் உயர் கல்வி பயின்றார். இறுதியாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் பட்டம் பெற்றார்.சினேகாவுக்கு 12 வயதாக இருந்தபோது, ​இந்திய வெளியுறவு சேவையில் சேர விரும்பினார். 2011ஆம் ஆண்டு முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

தனது குடும்பத்தில் அரசுப் பணியில் சேர்ந்த முதல் பெண் சினேகா என்பதும் குறிப்பிடத்தக்கது. தந்தை ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அம்மா ஒரு பள்ளி ஆசிரியை.இந்திய குடிமைப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சினேகா துபேயின் முதல் நியமனம் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மாட்ரிட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மாற்றப்பட்டார்.

அவர் தற்போது ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியாவின் முதன்மை செயலாளராக உள்ளார். சினேகாவின் ஐநா உரை காணொலி வெளியான பிறகு, ட்விட்டர் பயனர்கள் அவருக்கு பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.அதில் ஒரு பயனர், “பாகிஸ்தானில் ஜோக்கர்களின் வாயை மூடுவதற்கு இதுவே சிறந்த வழி. ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது; உண்மைகள் நிறைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *