செல்ல நாய்க்காக விமானத்தின் மொத்த Business class டிக்கெட்டை முன்பதிவு செய்த பெண்!

செப்டம்பர் 15 காலை, மும்பை விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா AI671 விமானத்தின் குழுவினர், ஆச்சர்யத்தில் மூழ்கியிருந்தனர். அவர்களின் ஆச்சர்யத்துக்கு காரணம் அவர்களின் அன்புக்குரிய பயணி தான். யார் அந்த பயணி என்கிறீர்களா?

மால்டிஸ் வகை நாய் தான் அன்றைய சிறப்பு பயணி. ’பேலா’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நாய் பயணிப்பதற்காக விமானத்தின் பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை மொத்தமாக முன்பதிவு செய்திருந்தார் பேலாவின் உரிமையாளர்.

ஏர் இந்தியா தனது ஏர்பஸ் 321 விமானம் செப்டம்பர் 15 காலை, மும்பை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு வருகை தந்தது. இந்த விமானத்தில்தான் பெண் பயணி ஒருவர் தனது செல்ல நாய்க்காக முழு பிசினஸ் கிளாஸ் இருக்கையையும் புக் செய்திருந்தார். தனது செல்ல நாய்க்கு வசதியான விமான பயணத்தை உறுதி செய்யும் வகையில் இப்படி செய்திருந்தார் அந்த பெண்மணி

இதற்காக அவர் செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா?

ரூ.2.5 லட்சம். ஏர் இந்தியா ஏர்பஸ் 321 விமானம் 12 பிசினஸ் கிளாஸ் இருக்கைகளைக் கொண்டது. ஒரு இருக்கைக்கான கட்டணம் ரூ.20,000 ஆகும். விமான அதிகாரி இதுதொடர்பாக பேசுகையில்,

“மும்பை-சென்னைக்கு பிசினஸ் கிளாஸ் இருக்கையின் சராசரி கட்டணம் சுமார் ரூ. 20,000 ஆகும், அந்த பெண் பயணி பயணத்திற்கு ரூ.2.5 லட்சம் செலுத்தினார்,” என்றார்.

ஏர் இந்தியா வட்டாரங்கள் கூறுகையில், “ஒரு பயணி முழு வணிக வகுப்பையும் பதிவு செய்வது அரிது என்றாலும், பொருளாதார வகுப்பில் செல்லப்பிராணிகளை பறக்க விடுவது அசாதாரணமானது அல்ல. பொருளாதார வகுப்பில் பல சந்தர்ப்பங்களில் நாய்களையும் பூனைகளையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்; ஒருமுறை, டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் வெள்ளெலிகள் கூட இருந்தன.

”தங்கள் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல விரும்புவோர் சரக்கு பெட்டகம் மூலமாகவோ அல்லது கேபினில் வைத்தோ எடுத்துச் செல்லலாம். ஆனால் உடல்நலம் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி சான்றிதழ் இருக்க வேண்டும். மேலும், செல்லப்பிராணியின் எடை 5 கிலோவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். அதேநேரம் அந்த பிராணியை மென்மையான காற்றோட்டமான பையில் கொண்டு செல்ல வேண்டும்,” என்றார்.

இதனிடையே, ஏர் இந்தியா AI671 விமானம் செப்டம்பர் 15 காலை 9 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு, 10.55 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது. அப்போது விமான நிலையத்தில் இருந்த அனைவரின் கவனத்தையும் பேலா நாய் ஈர்த்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *