24 சர்வதேச விருதுகளை வென்ற திரைப்படம்!

தமிழில் வணிகரீதியான திரைப்படங்களுக்கு மத்தியில் உலகம் முழுவதும் எண்ணற்ற திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 24 சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது “சின்னஞ்சிறு கிளியே” திரைப்படம்.

அம்மாவின் பெருமையை உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான படங்கள் பேசியுள்ளன. ஆனால் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பிணைப்பையும் அன்பையும் மனதை உருக்கும் வகையில் திரையில் வடித்திருக்கிறார்கள்.

தந்தை மகள் பாசத்தை மையமாகக் கொண்டு, ஆங்கில மருத்துவத்தின் விபரீதத்தையும் இயற்கை மருத்துவத்தின் மகத்துவத்தையும் விளக்கும்விதமாக மிகவும் நேர்த்தியாகப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இயற்கை மருத்துவத்தின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் விதமாகவும், மருத்துவத் துறையில் புகுந்திருக்கும் வியாபார ரீதியிலான கார்பரேட் வணிகத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது இப்படம்.

உலக திரைப்பட விழாக்களில் படத்தைப் பார்த்த விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டினர்.

பல்வேறு குறும்படங்களை இயக்கி பல விருதுகளை வென்றுள்ள சபரிநாதன் முத்துப்பாண்டியன் படத்தை இயக்கியுள்ளார்.

சின்னஞ்சிறு கிளியே படத்தின் மூலம் மறைந்த கரகாட்டக்காரன் புகழ் நடிகர் சண்முகசுந்தரத்தின் மகன் பாலாஜி சுந்தரம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். கவிஞர் விக்ரமாதித்யனும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *