IPL போட்டியில் அசத்தும் ரஜனி ரசிகர் வெங்கடேஷ் ஐயர்!

வெங்கடேஷ் ஐயர்’ ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இப்போது அவரின் ஆட்டத்தை பார்த்து மயங்கிக் கிடக்கிறது. அதற்கு ஒரு காரணமும் உண்டு. ஐபிஎல் களத்தில் அவர் விளையாடியது இரண்டே ஆட்டங்கள் தான். அதுவும் நடப்பு சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்களில் தான் அவரது அறிமுகமே அமைந்துள்ளது. அவரது வருகை கொல்கத்தா அணியில் புதிய பாய்ச்சலை கொடுத்துள்ளது. இரண்டே ஆட்டங்களில் 94 ரன்களை எடுத்துள்ளார். அது தான் இப்போது எல்லோர் மத்தியிலும் அவர் குறித்த பேச்சை எகிற செய்துள்ளது. உள்ளூர் மீடியா தொடங்கி உலக மீடியாக்கள் வரை இப்போது அவரது ராஜ்ஜியம் தான்.

“அந்த பையனுக்கு பயம் இல்ல!” என பொல்லாதவன் படத்தில் வரும் செல்வம் போல வசனம் பேசி வருகின்றனர் விமர்சகர்கள், எதிரணியினர் மற்றும் ரசிகர்கள். அவர் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களின் பவுலிங் அட்டாக்கை அடித்து நொறுக்கியது அதற்கு காரணம். 

யார் இந்த வெங்கடேஷ் ஐயர்?

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர். 26 வயது இளைஞர். தமிழர். ரஜினிகாந்த் ரசிகர்.  இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிள்ளைகளும் எப்படி கிரிக்கெட் விளையாட்டை பொழுது போக்காக விளையாடுவார்களோ அது போல தான் வெங்கடேஷ் ஐயரும் கிரிக்கெட் விளையாட தொடங்கி உள்ளார். இதற்கு பின்னால் ஒரு குட்டிக் கதையும் உள்ளது.

எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கும் வெங்கடேஷ் ஐயரை, அவரது அம்மா தான் வெளியில் போய் விளையாடு என சொல்லி நிர்பந்தித்துள்ளார். அதன் பலனாக தான் வெங்கடேஷ் கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

அவர் படிப்பிலும் படு கெட்டிக்காரர். அதற்கு ஒரு உதாரணம் தான் பட்டைய கணக்கர் தேர்ச்சிக்கு தேவையான Integrated Professional Competence Course தேர்வில் தேர்ச்சி பெற்றவர். MBA (பைனான்ஸ்) முடித்துள்ளார். வாழ்க்கையே வேறு விதமாக நகர்ந்திருக்கும். அதற்கு தகுந்த வேலையும் கிடைத்துள்ளது. ஆனால் கிரிக்கெட்டை அவர் தனது கரியராக மாற்றிக் கொண்டு அதில் சாதித்தும் வருகிறார். அதன் மூலம் நான் கிரிக்கெட் விளையாட்டிலும் வல்லவன் என நிரூபித்து வருகிறார்.

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர்!

வெங்கடேஷ் ஐயர் இப்போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக கலக்கி வருகிறார். இடது கை பேட்ஸ்மேனான அவர், ரைட் ஆர்ம் மீடியம் ஃபேஸில் பந்து வீசுபவர். அது அவருக்கு கூடுதல் பலமும் கூட. மத்திய பிரதேச அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் மாஸ் காட்டியவர்.

2020 – 21 விஜய் ஹசாரே டிராபியில் ஐந்து இன்னிங்ஸ் விளையாடி 273 ரன்களை குவித்துள்ளார். அதில் ஒரே ஒரு இன்னிங்ஸில் 146 பந்துகளில் 198 ரன்களை குவித்திருந்தார். அது தான் அவரை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணியை தூண்டுதலாக அமைந்தது. அதன் விளைவாக அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு ஐயரை ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி. 

2020 – 21 சையத் முஷ்டக் அலி கோப்பை தொடரிலும் மத்திய பிரதேச அணிக்காக ஐந்து இன்னிங்ஸ் விளையாடி 227 ரன்களை எடுத்திருந்தார்.

2015 முதல் லிஸ்ட் ஏ போட்டிகள், 2018 முதல் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் விளையாடி வருகிறார். இதுவரை 10 முதல் தர கிரிக்கெட் போட்டிகள், 24 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி உள்ளார். டி20 கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் சராசரி 38.95.

கங்குலி கொடுத்த தாக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் இந்நாள் தலைவருமான கங்குலியின் தீவிர ரசிகர் வெங்கடேஷ் ஐயர். அதை அவர் ஒரு பேட்டியிலும் தெரிவித்துள்ளார்.

“சிறுவயதில் நான் வலது கை பேட்டிங் தான் செய்து வந்தேன். கங்குலியின் ஆட்டத்தை பார்த்து நான் வியந்து போனேன். குறிப்பாக இடது கை பேட்ஸ்மேனாக அவர் சுழட்டி அடிக்கும் சிக்ஸர்களுக்கு நான் அடிமை. எனது ஆட்டத்தின் மூலம் கங்குலியை பிரதிபலிக்க விரும்பினேன்.

அதனால் நான் என்னை கங்குலியாகவே நினைச்சுக்கிட்டேன். இடது கையால் பேட் செய்ய பழகினேன். கங்குலியாகவே மாறி நின்னேன்” என தெரிவித்துள்ளார்.

கங்குலி போலவே இடது கையில் பேட் செய்யும் அவர், வலது கையால் பந்து வீசுபவர். இதோடு தனது ஐபிஎல் பயணத்தை கொல்கத்தா அணியுடன் தொடங்குவது மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார் வெங்கடேஷ். அதற்கு ஒரு சென்ட்டிமென்ட் காரணமும் உள்ளது. கங்குலி ஐபிஎல் களத்தில் முதன்முதலில் கொல்கத்தாவுக்கு விளையாடியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார் வெங்கடேஷ்.

ஆறாவது பேட்ஸ்மேன் டூ ஓப்பனர்!

“ஐயரின் ஆட்டத்தில் ஒரு தாக்கம் இருந்ததை நான் உணர்ந்தேன். அதனால் ஆறாவது பேட்ஸ்மேனாக விளையாடி வந்தவரை தொடக்க வீரராக கடந்த சீசனின் சையத் முஷ்டக் அலி தொடரில் மத்திய பிரதேச அணிக்காக களம் இறக்கினேன். அப்போது நான் அவரிடம் ஒன்று சொல்லி இருந்தேன்.

‘அடுத்த ஐந்து இன்னிங்ஸில் நீங்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை என்றாலும் அணியின் ஓப்பனர் நீங்கள் தான்’ என சொன்னேன். அந்த மாற்றம் எங்களுக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. அதற்கு பின்னர் தான் அவர் அணியின் ஆஸ்தான தொடக்க வீரர் ஆனார். அவரது பேட் வீச்சு மிகவும் வேகமாக இருக்கும். அதில் வலுவும் இருக்கும். டி20 கிரிக்கெட்டுக்கு தேவையான ஆட்ட நேர்த்தி அதில் இருப்பதாக நான் பார்க்கிறேன்” என்கிறார் இந்திய அணியன் முன்னாள் விக்கெட் கீப்பரும், மத்திய பிரதேச அணியின் பயிற்சியாளருமான சந்திரகாந்த் பண்டிட்.

கில்கிறிஸ்ட் வகையறா!

“ஐயர், முன்னாள் ஆஸ்திரேலியா தொடக்க வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் போல ஆட்டத்தை அணுகுவதாக நான் கருதுகிறேன். அவர் விளையாடுவதை பார்க்கவே ஆர்வமாக உள்ளது. முதல் பந்திலிருந்தே அடித்து ஆடும் தன்மை கொண்ட வீரர்” என தெரிவித்துள்ளார் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்கல்லம்.

போல்ட் – பும்ராவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது எப்படி?

மும்பை அணியில் கிரிக்கெட் உலகில் அபாரமாக பந்து வீசும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான போல்ட், பும்ரா மாதிரியான வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்களது பந்தை துவம்சம் செய்திருந்தார் வெங்கடேஷ். அது குறித்து ஆட்டத்திற்கு பிறகு அவரிடம் கேட்கப்பட்டது.

“நான் விளையாடும் போது பந்து வீச்சாளர்களை பார்ப்பதில்லை. மாறாக அவர்கள் வீசுகின்ற பந்துகளை தான் பார்க்கிறேன். அதனால் என்னால் ஸ்கோர் செய்ய முடிகிறது. மேலும் நாங்கள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடியதை இப்போது எக்ஸ்கியூட் செய்கிறோம். அவ்வளவு தான். மற்றபடி ஒன்றும் இல்லை” என சொல்லியுள்ளார் வெங்கடேஷ்.

கவனிக்கத்தக்க வீரரான வெங்கடேஷ்!

வெங்கடேஷ் குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாது எதிரணியினரும் பேச தொடங்கி உள்ளனர். இனி கொல்கத்தா அணிக்கு எதிரான வியூகங்களை வகுக்கும் போது அந்த லிஸ்டில் வெங்கடேஷ் ஐயரும் இருப்பார். இப்போது தனது வருகையை கல்வெட்டில் பதித்தது போல ஆழப்பதித்துள்ளார். அதை அப்படியே தொடருவார் என நம்புவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *