இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் தினமும் 20 பெண்கள் மரணம்!

நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருந்தாலும் கூட இப்போதும் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 20 பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கிறார்கள் என்பது அதிர்ச்சி தரும் உண்மை. அதாவது ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்கு ஒரு பெண்ணின் உயிர் வரதட்சணை கொடுமையின் காரணமாக பறிபோகிறது, இது குறித்த ஒரு முழுமையான பார்வை.

இந்தியாவில் கல்வியறிவு ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிறது, பெண்கல்வியும் கூட மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. கல்வியறிவின் காரணமாக பெண்கள் ஆட்டோ ஓட்டுநர் தொடங்கி விண்வெளி வீராங்கனை வரை சாதித்தாலும் வரதட்சணை கொடுமை என்பதில் யாருக்குமே பாகுபாடு இல்லை. அதுபோல வளர்ந்த மாநிலம் – பின் தங்கிய மாநிலம், படிப்பறிவு அதிகமுள்ள சமூகம் – படிப்பறிவற்ற சமூகம், கிராமப்புற பகுதிகள் – நகர்ப்புறங்கள் என எந்த பாகுபாடும் இன்றி வரதட்சணை கொடூர மரணங்கள் நம்மை நிலைகுலையவே செய்கிறது.

1961 ஆம் ஆண்டிலேயே வரதட்சணைக்கு எதிரான சட்டம் நாட்டில் இயற்றப்பட்டாலும்கூட, இப்போது வரைக்கும் ஒழிக்கவே முடியாத கொடூரங்களில் ஒன்றாக வரதட்சணை கொடுமை உள்ளது. இந்தியவில்  மதம், மொழி, சாதி, வாழ்விடங்கள் என கலாச்சாரங்கள் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது, ஆனால் எந்த இடத்திலும் மாறாமல் இருப்பது வரதட்சணை கொடுமைதான். இந்திய குற்ற ஆவணங்களின்படி எல்லா மதம், மொழி, வாழ்விடங்களில் உள்ள மக்களிடமும் வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளதே இதற்கு சான்று. ஆனால் நகை, பணம், பொருட்கள், சொத்துகள், வாகனங்கள் என வரதட்சணை வடிவங்கள் மட்டும் காலத்திற்கேற்ப மாறி வருகிறது.

இந்தியாவில் வரதட்சணை மரணங்கள்:

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வரதட்சணை மரணங்கள் குறையாமலே இருந்து வருகிறது என்பதை தேசிய குற்ற ஆவண காப்பக பதிவேடுகளின் புள்ளிவிபரங்கள் மூலமாக அறியலாம். வரதட்சணை கொடுமையால் 2005 ஆம் ஆண்டில்  6,787 மரணங்களும், 2010 ஆம் ஆண்டில்  8,391 மரணங்களும், 2011 ஆம் ஆண்டில் 8,618 மரணங்களும், 2012 ஆம் ஆண்டில்  8,233 மரணங்களும், 2013 ஆம் ஆண்டில்  8,083 மரணங்களும், 2014 ஆம் ஆண்டில்  8,455 மரணங்களும், 2015 ஆம் ஆண்டில்  7,634 மரணங்களும்,  2016 ஆம் ஆண்டில்  7,621 மரணங்களும், 2017 ஆம் ஆண்டில்  7,466 மரணங்களும், 2018 ஆம் ஆண்டில்  7,167 மரணங்களும், 2019 ஆம் ஆண்டில்  7,141 மரணங்களும், 2020 ஆம் ஆண்டில் 6,966 மரணங்களும் பதிவாகியுள்ளன.

2019 ஆம் ஆண்டின் குற்ற ஆவணப்பதிவு தகவல்களின்படி, இந்தியாவிலேயே அதிகளவில் வரதட்சணை மரணங்கள் உத்தரப்பிரதேசத்தில் பதிவாகியுள்ளது, அடுத்தடுத்த இடங்களை முறையே பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட், ஹரியானா ஆகியவை பெற்றுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 2418 மரணங்கள், பீகாரில் 1120, மத்திய பிரதேசத்தில் 550, ராஜஸ்தானில் 452, ஒடிசாவில் 342, ஜார்க்கண்ட்டில் 299, ஹரியானாவில் 248 என வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. குறைந்த பட்சமாக மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரு வரதட்சணை மரணம் கூட பதிவாகவில்லை. அருணாச்சலில் 1, கோவாவில் 1, மேகாலயாவில் 3, இமாச்சலில் 4, ஜம்மு காஷ்மீரில் 8, கேரளாவில் 8 என பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் 2019இல் 28 பேர் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் வரதட்சணை மரணங்களில் மூன்றில் இரண்டு பங்கு வட மாநிலங்களில், அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேச மாநிலங்களில் பதிவாகிறது. இதில் ஆறுதல் தரும் விஷயமாக வடகிழக்கு மாநிலங்களில் மிகக்குறைவான இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.  சமீபத்திய ஆண்டுகளில் கேரளாவில் வரதட்சணை கொடுமை மரணங்கள் அதிகரித்தது தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது, அதிலும் கடந்த சில மாதங்களில் பல பெண்கள் வரதட்சணையால் கேரளாவில் மரணமடைந்தது நாட்டில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.           

வரதட்சணை ஒழிப்பு சட்டம்:

1961ல் வரதட்சணை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1984 மற்றும் 1986 ஆம் ஆண்டு என  இருமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இச்சட்டத்தின்படி வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமே, இதற்கு 5 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும். ரூ. 15 ஆயிரம் அல்லது வரதட்சணையாக பெறப்பட்ட பணமோ, பொருளோ அதற்கான மதிப்பீட்டின்படி இவற்றில் எது அதிகமோ அது அபராதமாக வசூலிக்கப்படும். ஒருவேளை வரதட்சணை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் 5 ஆண்டுகளுக்குக் குறைவாக தண்டனை கொடுக்கும் பட்சத்தில், அதற்கான காரணங்களை தீர்ப்பில் தெளிவாக விவரிப்பது அவசியம் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

எந்த ஒரு நபரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை கோரி கட்டாயப்படுத்தினால் குறைந்தது 6 மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரையிலும், ரூ. 10 ஆயிரம் வரை அபராமும் விதிக்கப்படும். இந்திய வரதட்சணை ஒழிப்பு  சட்டத்தில் 1983ல் 498 ஏ என்ற பிரிவு இணைக்கப்பட்டது. இதில் கணவனும், அவனது உறவினர்களும் மனைவியை மனரீதியாகக் கொடுமைப்படுத்தினாலும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்பது முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

பிறகு 1986ல், 304 பி என்ற பிரிவு வரதட்சணை மரணம் குறித்து திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பெண் சந்தேகமான சூழலில் இறந்தால், அது வரதட்சணை மரணம் என்று தான் வழக்கு பதிவு செய்யப்படும். இந்த வழக்கில் குற்றச்சாட்டு உண்மையல்ல என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் நிரூபிக்க வேண்டும். முக்கியமாக, மரண வாக்குமூலத்துக்கு மாஜிஸ்திரேட் வர வேண்டும் என்ற அவசியமில்லை, மருத்துவரே போதும் என்ற விதியும் இந்த திருத்தம் மூலமாக  அறிமுகமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *