இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவுக்கு அமீரகத்தின் உதவியை கோரியது!


கொவிட்-19 காரணமாக இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் கொள்வனவு செய்தல் தொடர்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவியை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வின் பக்க நிகழ்வாக, ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி. சுல்தான் அல் ஜாபரைச் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சந்தித்ததுடன், பரஸ்பரம் புரிந்துணர்வு மற்றும் மரியாதை அடிப்படையில் நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டை இரு அமைச்சர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானுடனான தனது நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த அமைச்சர் பீரிஸ், அவரை விரைவில் இலங்கைக்கு வரவேற்கக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

சர்வதேச கடல்சார் அமைப்பு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை உட்பட சர்வதேச அரங்குகளில் இலங்கையும் ஐக்கிய அரபு இராச்சியமும் பயனுள்ள மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன.

பல்வேறு நிபந்தனைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை நாடுகளின் மீது சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அனைத்துக் கொள்கைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு கொள்கை முடிவுகளை வழங்காது என்றும் இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

அனைத்துக் கொள்கைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு கொள்கை காலநிலை மாற்றத்திற்கும் பொருந்தாது எனக் குறிப்பிட்ட அமைச்சர் அல் ஜாபர், நாடுகள் தமது பொருளாதாரத்தைப் பாதிக்காமல் பருவநிலை மாற்றத்தைத் தழுவி, அதனைத் தணிப்பதற்கு அனுமதிக்கும் வழிமுறைகளை வரையறுப்பது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

2023ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டை (சி.ஓ.பி. 28) நடாத்துவதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் தனது பரிந்துரையை முன்வைத்து, இலங்கையின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏறத்தாழ 300,000 இலங்கையர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசித்து வருகின்றனர். குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோயின் போது, இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி, அவர்களது நலன்களைப் பேணியமைக்காக இலங்கை அரசாங்கத்தினது பாராட்டுக்களை வெளிநாட்டு அமைச்சர்  தெரிவித்தார்.

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் அமீரகத்தின் உதவியை கோரியது இலங்கை அரசாங்கம்-Sri Lanka Foreign Minister GL Peiris Requests UAE Assistance Regarding Purchase of Oil

தொழிலாளர்களின் நலன் தொடர்பான ஆக்கபூர்வமான சட்டத்தை அறிமுகப்படுத்திய ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரசாங்கத்திற்கு அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கையில் தடுப்பூசிகளை ஏற்றும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் அல் ஜாபருக்கு சுருக்கமாக விளக்கிய அமைச்சர் பீரிஸ், விசாக்களின் தளர்வுகளைப் பாராட்டிய அதே வேளையில், அதனை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும் எதிர்பார்த்தார்.

குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தில் இருந்து வருபவர்களின் குறிப்பிட்ட முன்னுரிமைகள் மற்றும் தேவைகளுக்கு இடமளிக்கும் திறனை எடுத்துக்காட்டும் வகையில், சுற்றுலாத் துறையை மீண்டும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை அவர் கோடிட்டுக் காட்டினார்.

கொவிட்-19 தொற்றுநோயின் விளைவாக இலங்கை அதன் வரவு செலவுத் திட்டத்தில் தற்போது அனுபவிக்கும் சவால்களை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் விளக்கினார்.

அவர் நாட்டின் எண்ணெய்த் தேவை குறித்து குறிப்பாக கவனம் செலுத்தியதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து சலுகை ஏற்பாடுகளைக் கோரினார். அதற்கு சாதகமாக பதிலளித்த அமைச்சர் அல் ஜாபர், ஐக்கிய அரபு இராச்சியம் உதவிகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்ததுடன், இந்த செயன்முறையை முன்னோக்கி எடுத்துச் செல்ல ஒரு மூலோபாயக் கட்டமைப்பை நிறுவுவதற்கு முன்மொழிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *