குற்றம் செய்தல் இலகு! ஆனால் விளைவோ பாரதூரம்!!

– பஸ்றி ஸீ. ஹனியா
LL.B (Jaffna)

மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயல்களிலும் சரியானது, பிழையானது என இரு பிரிவுகள் காணப்படுகின்றன. அவ்வாறான பிரிவுகளில் பிழையானது எனக் கருதப்படும் விடயங்கள் குற்றமாகக் கருதப்படுகின்றன. அவ்வாறு குற்றம் செய்தவர்கள் பல வேளைகளில் சமூகத்தாலும் சில வேளைகளில் சட்டத்தாலும் தண்டிக்கப்படுகின்றார்கள்.

இன்னும் தெளிவாகக் கூறுவோமாயின் சமூகத்தால் சில விடயங்கள் குற்றமாகவும், பிழையானதாகும் கருதப்படுகின்றன. ஆனால், அவை அனைத்துமே சட்டத்தால் குற்றமானதாகக் கருதப்படுவதில்லை. மேலும் சட்டத்தால் குற்றமாகக் கருதப்படும் விடயங்கள் சமூகத்திலும் குற்றமாகப் பார்க்கப்படுகின்றன.

உதாரணமாக தற்போது ‘மதம் மாறுதல்’ என்ற விடயம் சமூகத்தால் குற்றமான ஒரு செயலாகப் பார்க்கப்படுகின்றது. இருந்தபோதிலும், அது சட்டத்தால் குற்றமான ஒரு செயலாகப் பார்க்கப்படவில்லை.

‘கொலை செய்தல்’ என்ற விடயம் சட்டத்தால் குற்றமாகப் பார்க்கப்படும் அதேயளவு சமூகத்தாலும் குற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

குற்றம் என்றால் என்ன என்ற கேள்விக்கான பதிலானது, இற்றை வரைக்கும் சரியான வரைவிலக்கணம் இல்லாவிட்டாலும் அதனை ஓரளவுக்கு விவரிக்கலாம்.

சமூகமானது பல விடயங்களைக் குற்றமாகக் கருதுகின்றது. அவ்வாறான விடயங்கள் சமூகத்துக்குச் சமூகம் மாறுவதும் உண்டு.

உதாரணமாக மேலைத்தேய சமூகங்களில் குற்றமற்றதாகப் பார்க்கப்படும் விடயங்கள் கீழைத்தேய சமூகங்களில் குற்றமாகப் பார்க்கப்படுகின்றன.

உதாரணமாக ‘ஆபாசமாக உடை’ அணிவதைக் குறிப்பிடலாம். இவ்வாறு சமூகத்தால் பார்க்கப்படும் பல விடயங்களில் சில ஏற்றுக்கொள்ளவே முடியாத விடயங்களைப் பிரித்தறிந்து அவற்றில் குறிப்பிட்ட நாட்டில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவான பாதகங்களைத் தேடும் விடயங்கள் மற்றும்  தனிமனிதன், சமூகங்கள், அரசுக்குப் பாதகங்களை  ஏற்படுத்தும் விடயங்கள் என்பவற்றை சட்டமானது குற்றம் எனக் கூறுகின்றது.

ஆகவே, குற்றம் என்றால் என்ன என்ற கேள்விக்கு எளிய முறையில் சட்டத்தால் தடுக்கப்பட்ட ஒரு செயலைச் செய்வது என்று கூறிவிடலாம்.

குற்றம் எனக் கண்டுபிடிப்பதற்கான முக்கிய அம்சங்கள் என்னவென்றால், குற்றச் செயல் மற்றும் குற்ற மனம் இரண்டுமே ஒரு செயலில் இருக்கும்போது அது குற்றமாகக் கருதப்படுகின்றது.

இந்திய தண்டனைச் சட்டக்கோவையானது குற்ற மனம் இல்லாமல் செய்யப்படும் குற்றச் செயல் குற்றமாகாது எனத் தெளிவாகக்  கூறுகின்றது.

இங்கு குற்ற மனம் என்பது ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்வதற்குத் தன் மனதால் தானே முடிவு எடுத்துக்கொண்டு அக்குற்றச் செயலைச் செய்ய எண்ணுதல் ‘குற்ற மனம்’ எனலாம்.

‘குற்றச் செயல்’ எனப்படுவது தன் குற்ற மனத்தால் எண்ணிய அந்த எண்ணத்தை நடைமுறைப்படுத்தும் நிகழ்வாகும். அதாவது தடுக்கப்பட்ட செயலைச் செய்தல் எனலாம்.

இதற்குப் புறநடையாகச் ‘செய்யாமை’ கூட குற்றச் செயலாகக் கொள்ளப்படுகின்றது. அதாவது சட்டப்படி செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமை உதாரணமாக ரயில் கடவை மூடும் தொழிலைச் செய்பவர் ரயில் வரும்  வேளையில்  கடவையை மூடாததன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பில் கடவை மூடும் தொழிலைச் செய்பவர் குற்றவாளியாகின்றார். ஆகவேதான் தனக்குத் தரப்பட்டிருக்கும் பொறுப்பைச் சரியாகச் செய்யாமைகூட குற்றம் என நிரூபிக்கப்படலாம்.

இருந்தபோதிலும் அதைக் கட்டுப்படுத்த முடியாத செயலாக இருப்பின் உதாரணமாக நடைபெறும் ஒரு செயல்  அதிக பலத்துடன் நடைபெறும் ஒரு செயல், மேலும் கட்டுப்பாட்டுக்கு அப்பால் நடக்கும் ஒரு செயலுக்கு இது பொருந்தாது.

இதுதவிர இவ்வாறான குற்றங்கள் தாமாக நடைபெற்றனவா? அல்லது தன் இச்சை இல்லாமல் இன்னொருவரின் தூண்டுதலின் காரணமாக நடைபெற்ற விடயமா? என்பதனை அவதானிப்பது முக்கியமாகின்றது.

இவை அனைத்துக்குமே புறநடையாக, எட்டு வயதுக்குட்பட்ட பிள்ளை ஒன்றால் செய்யப்படக்கூடிய எதுவுமே குற்றமாகாது. ஏனெனில் எட்டு வயதுக்குட்பட்ட பிள்ளையால் குற்ற மனம் ஒன்றை உருவாக்க முடியாது. ஆகவே, குற்றமற்ற குற்றச்செயல் குற்ற மனமாகக் கருதப்படாது என்பது மறுதலிக்கப்பட முடியாத ஊகமாகும்.

ஆகவேதான் குற்றம் செய்தல் என்பது இலகுவான விடயம். ஆனால், அதற்கான விளைவுகளானவை பாரதூரமானதாகவே சட்டத்தால் பார்க்கப்படுகின்றது. சில நிமிடங்களில் செய்யப்படும் குற்றமானது பல வருடங்களைச் சிறையில் செலுத்த வேண்டிய அற்ப நிலைக்கு உள்ளாக்கி விடுகின்றது.

மேலும், ஒருவர் செய்யும் குற்றத்தால் இன்னொருவர் பாதிக்கப்படுதல் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாததும் பாவகரமானதுமான செயலாகும். ஆகவேதான், குற்றங்கள் நடைபெறாமல் இருக்கப்பட வேண்டுமெனில்  குற்ற மனங்கள் உருவாக்கப்படக்கூடாது. அதற்கு ஒவ்வொரு மனிதனும் தன் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் என்பது அத்தியாவசியமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *