‘ஹேர் டை’யால் ஏற்படக்கூடிய ஆபத்துகள்!

இன்றைய இளைஞர்கள் எதிலும் வித்தியாசம் காட்டுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். தலைமுடியை வெட்டிக்கொள்வது, முடிக்கு வண்ணம் அடிப்பது, ஆடைகளைக் கிழித்து அணிவது என இதன் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

தலைமுடியில் வித்தியாசம் காட்ட ஹைலைட்ஸ், ப்ரவுன், பர்கண்டி என வெரைட்டி காட்டத் துவங்கி விட்டார்கள்.

உடையில் இருக்கும் வண்ணம் முடியிலும் வர வேண்டும் என உடைக்கு ஏற்ற நிறத்தில் கலரிங் பயன்படுத்துகிறார்கள். அதற்காக பல்வேறு நிற ஹேர் டையைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் ஹேர் டையை அடிக்கடி நாம் பயன்படுத்துவது நம்மை ஆபத்தில் கொண்டு நிறுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சரும மருத்துவரான செல்வி ராஜேந்திரன், ஆரோக்கியத்தைவிட அழகொன்றும் பெரிய விஷயமில்லை என்கிறார். அவருடைய விரிவான நேர்காணலைப் பார்க்கலாம்.

“ஹேர் கலரிங்கில் மூன்று வகைகள் உள்ளன. தற்காலிகமானவை, சில நாள்கள் நீடிக்கக்கூடிய செமி பர்மனென்ட் மற்றும் நிரந்தரமானவை.

இவற்றில் நிரந்தரமான கலரிங்கில் ஸ்ட்ராங்கான கெமிக்கல் கலவை அதிகமிருக்கும்.

இதிலுள்ள அதிக அளவிலான பெராக்ஸைடு, கூந்தலின் தண்டுப் பகுதியைத் திறக்கச் செய்து கலர், கூந்தலின் ஆழம்வரை செல்லவைக்கும். அதனால் கூந்தல் பெரியளவில் பாதிக்கப்படும். 8 முதல் 10 வாரங்கள் நீடிப்பவை இவை.

செமி பர்மனென்ட் கலர்களில் நிரந்தர டையைவிட பெராக்ஸைடின் அளவு குறைவு.

தற்காலிக கலரிங் என்பவை தலைக்குக் குளிக்கும்வரை மட்டுமே நீடிப்பவை.

நிரந்தர கலர்களைவிட இந்த இரண்டிலும் ஆபத்து குறைவு என்றாலும், அவையும் ஆரோக்கியமானவை அல்ல.

இவை தவிர பிளீச்சிங் சிகிச்சையும் உண்டு. இது கூந்தலின் கலரை முழுமையாக நீக்கும். அடிக்கடி இதைச் செய்தால் கூந்தல் மஞ்சள் நிறத்துக்கு மாறும்.

ஹேர் கலரிங்கில் உள்ள கெமிக்கல்களால், கூந்தலின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும். கூந்தலின் பளபளப்பு மறைந்து, எளிதில் உடைவதாக மாறும். டையில் உள்ள ‘பாராபெனிலின் டை அமைன்’ (PPD) என்ற பொருள் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது.

எக்ஸீமா, சோரியாசிஸ் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் ஹேர் டை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். அரிப்பு, சிவந்துபோவது, மண்டை மற்றும் முகத்தில் வீக்கம் போன்றவை டை அலர்ஜியின் அறிகுறிகள்.

நிரந்தர கலரிங்கில் உள்ள லெட் அசிட்டேட் மலட்டுத்தன்மைக்குக்கூட காரணமாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆண், பெண் இருவரும் இதற்கு விதிவிலக்கல்ல. கர்ப்பிணிகள் கட்டாயம் கலரிங் செய்யக்கூடாது.

அடிக்கடி டை உபயோகிப்பவர்களுக்கு ‘பிங்க் ஐ’ அதாவது கன்ஜங்டிவிட்டிஸ் எனப்படும் கண் பாதிப்பு ஏற்படலாம். கண்கள் வீங்கும், சிவந்துபோகும்.

ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். ஏற்கெனவே ஆஸ்துமா இருப்பவர்களுக்கு அது தீவிரமாகும். இதற்கு டையில் உள்ள பெர் சல்பேட் என்ற கெமிக்கலே காரணம்.

இதை சுவாசித்தால் இருமல், வீஸிங், தொண்டைக் கரகரப்பு, நுரையீரல் வீக்கம் போன்றவை ஏற்படலாம்.

டை உபயோகம் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் பல ஆய்வுகள் சொல்கின்றன.

ஆபத்துகளை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிற கெமிக்கல்களுக்குப் பதிலாக மாற்று ரசாயனங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிற டை வகைகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

ஆனாலும் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

தவிர்க்கவே முடியாத தருணங்களில் ஹேர் கலரிங் செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

நிரந்தர டையைத் தவிர்ப்பது நல்லது. செமி பர்மனென்ட் அல்லது தற்காலிக கலரிங்கை தேர்ந்தெடுக்கலாம்.

பேட்ச் டெஸ்ட் செய்த பிறகே கலரிங் செய்ய வேண்டும். அலர்ஜி இருந்தால் இது உறுதிசெய்யும்.

கலரிங் செய்வதில் அடிப்படை தெரிந்த, அனுபவம் உள்ளவரிடம் மட்டுமே செய்துகொள்ள வேண்டும்.
நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள இடத்தில் கலரிங் செய்ய வேண்டும். இருட்டான, காற்றோட்டமில்லாத சூழலில் செய்யும்போது கண் எரிச்சல் ஏற்படலாம்.

நம்பகமான நிறுவனத் தயாரிப்புகளைப் பயன்படுத்தவும். குறைவான கெமிக்கல் கலவை உள்ளவையா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

‘பாராபெனிலைன் டை அமைன்’ உள்ள கலர் தவிர்க்கப்பட வேண்டும். ‘பிபிடி ஃப்ரீ’ என்ற குறிப்போடு நிறைய தயாரிப்புகள் வருகின்றன. அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஹென்னா, காபி, டீ டிகாக்ஷன், பீட்ரூட், கேரட் சாறு போன்ற இயற்கையான பொருள்களை இயற்கையான ஹேர் டையாக உபயோகிக்கலாம். இவை சரியான கலவையில் இருக்க வேண்டும். தவறினால் கூந்தல் வறண்டு உடைந்து உதிரும்.’‘

நன்றி : அவள் விகடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *