இலங்கை கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு ஒரு விஷேட செய்தி!

தொலைத்தொடர்பு வலையமைப்புகளால் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் பெறுமதி சேர் சேவைகள் (VAS) தொடர்பில், வாடிக்கையாளர்களின் நலன் அடிப்படையிலான, இறுக்கமான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் (TRC) குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில், TRC வெளியிட்டுள்ள ட்விற்றர் செய்தியில்,

“அனைத்து தொலைத்தொடர்பு வலையமைப்புகளும் பெறுமதி சேர் சேவைகளை (VAS) வழங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விரிவான கட்டமைப்பு மற்றும் வழிகாட்டல்களை, நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முறைப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்களுக்கமைய, ‘எந்தவொரு சேவையையும் செயற்படுத்தும்போது, ஒரு முறை செயற்படுத்தும் 4 இலக்க கடவுச்சொல் (OTP) அனுப்பப்பட்டு அதனை வாடிக்கையாளர் உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’.

வாடிக்கையாளர் செயற்படுத்தியுள்ள பெறுமதி சேர் சேவையை (VAS) செயற்படுத்தும் ஒவ்வொரு தடவையும் (தினசரி, வாராந்தம், மாதாந்தம்) வாடிக்கையாளருக்கு SMS அனுப்பப்படுவதோடு, அதனை செயலிழக்கச் செய்வதற்கான முறையை அதனுடன் இணைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசி இலக்க கணக்கில் உரிய நிலுவை இல்லாத நிலையில், தொலைபேசி வலையமைப்பாளர்கள், புதிதாக VAS இனை செயற்படுத்தும் செயற்பாட்டை மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கின் நிலுவை பூச்சியமாக இருக்கும் காலப்பகுதிக்காக, குறித்த பெறுமதி சேர் சேவைக்கான தினசரி, வாராந்த, மாதாந்த கட்டணத்தை, கணக்கை மீள் நிரப்பும்போது அறவிடக் கூடாது என்பதோடு, கணக்கு மீள்நிரப்பப்பட்ட பின்னரான காலப் பகுதியிலிருந்தே அதற்கான கட்டணம் அறவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வலையமைப்புகளும் அனைத்து வாடிக்கையாளர்களும், 3ஆம் தரப்பு இணைய வழி அடிப்படையிலான சந்தா அறவீடுகள் உள்ளிட்ட அவர்கள் தேர்ந்தெடுத்த அனைத்து VAS இனையும், ஒரு தகவலின் மூலம் சந்தாதாரர் தெரிவு செய்த அனைத்து VAS களின் ஒருங்கிணைந்த பட்டியலையும் அதிலிருந்து எவ்வாறு நீங்குவது என்பது தொடர்பிலும் அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தியை அனுப்புவதை, TRC இனால் பரிந்துரைக்கப்பட்ட திகதியில் உறுதி செய்ய வேண்டும்.

இதனை மீளாய்வு செய்யும் வகையில், சந்தாதாரர்களால் முன்வைக்கப்படும் அனைத்து முரண்பாடுகள் தொடர்பிலும் ஒரு விரிவான பரிந்துரைக்கப்பட்ட வடிவத்திலான அறிக்கையொன்றை TRC இற்கு வழங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *