குடும்பத் தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை பசியால் 9 மாத குழந்தை உயிரிழப்பு!

பெங்களூருவில் குடும்ப தகராறில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டதால், 9 மாத குழந்தை பசியால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெங்களூரு பேடரஹள்ளி அருகே சேத்தன் சர்க்கிள் 5வது கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் சங்கர். இவரது மனைவி பாரதி. இந்த தம்பதிக்கு சிஞ்சனா, சிந்துராணி என்ற மகள்களும், மதுசாகர் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் திருமணமாகி சிஞ்சனாவுக்கு 3 வயதில் பிரக்சா என்ற பெண் குழந்தையும், சிந்துராணிக்கு பிறந்து 9 மாதங்களே ஆன ஒரு ஆண் குழந்தையும் இருந்தது.

சங்கர் பத்திரிகை நடத்தி வருவதுடன், அதன் ஆசிரியராகவும் இருந்து வருகிறார். குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கர் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டு சென்று விட்டார். இதனால் அவர் 5 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில், நேற்று மாலையில் சங்கரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஜன்னல் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது பாரதி தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாரதி, அவரது மகள்கள் சிந்துராணி, சிஞ்சனா, மகன் மதுசாகர் ஆகிய 4 பேரும் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். வீட்டின் மற்றொரு அறையில் 9 மாத குழந்தை பிணமாக கிடந்துள்ளது. மேலும், மற்றொரு அறையில் மயங்கிய நிலையில் 3 வயது குழந்தை பிரக்சா இருப்பதை கண்டனர்.

உடனடியாக அந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தில் சிஞ்சனாவின் 3 வயது பெண் குழந்தையான பிரக்சா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்து இருந்தது. உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் 5 நாட்களுக்கு பிறகு 3 வயது குழந்தை உயிர் பிழைத்திருப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *