லாபம் -வீணாகிப்போன விஜய் சேதுபதியின் நன்றியுணர்ச்சி!

பலரது கூட்டுழைப்புதான் ஒரு திரைப்படத்தைச் சிறந்ததாக்குகிறது. அப்படிப் பலர் தங்களால் முடிந்த கைங்கர்யங்களைச் செய்வதே, சில நேரங்களில் ஒரு படைப்பைச் சின்னாபின்னமாக்கிவிடும் என்பது சம்பந்தப்பட்ட படக்குழுவினருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உருவாக்கிய ‘லாபம்’ பார்த்து முடித்ததும், அந்த எண்ணம் மேலும் வலுப்பெறுகிறது.

ஒரு கதை சொல்லட்டுமா சார்..!

காடு, மலைகளெல்லாம் சுத்தி முடிச்சதும் ஹீரோ தன்னோட சொந்த ஊரான பெருவயலுக்குத் திரும்புறார். ‘விவசாயம் மட்டும்தான் மண்ணையும் மக்களையும் காக்கும்’கற உண்மையை இடைப்பட்ட காலத்துல அவர் உணர்ந்திருக்கார்.

ஊர் திரும்புனவுடனே அவர் சொல்றதை, அந்த ஊர் மக்களும் ஏத்துக்கறாங்க; பெருவயல் விவசாயிகள் சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடியுற நேரம் அது. நேரா சங்கத்துக்குப் போற ஹீரோ தேர்தல்ல போட்டியிடப் போறதா சொல்றார்.

அதுநாள் வரைக்கும் சங்கத்தோட தலைவரா இருந்து ஊரையும் உலகத்தையும் ஏமாத்திகிட்டு இருக்குற வில்லன், உடனே தான் தேர்தல்ல இருந்து விலகுறதா அறிவிக்கிறார். ஹீரோ தலைவரா ஆகுறார்.

அந்த நிமிஷத்துல இருந்து, விவசாயிகள்கிட்ட இருந்து பொருட்களை கொள்முதல் பண்ற பெருமுதலாளிகள் எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கன்னு ஏழை மக்களுக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிக்கிறார் ஹீரோ. அவரோட முயற்சிகள் பலிச்சிட்டா தன்னோட குட்டு அம்பலப்பட்டுடும்னு அதையெல்லாம் தடுக்கறார் வில்லன்.

‘லாபம்’னா என்ன்னனு மக்களுக்குத் தெரிஞ்சுட்டா நிலைமையே தலைகீழாகிடும்னு அதிகார வர்க்கத்தை ஏவி ஹீரோவையும் அவரை நம்பியிருக்குற மக்களையும் அழிக்க நினைக்கறார். அது நடந்ததா இல்லையாங்கறதுதான் மீதிக்கதை.

‘பாட்டி வடை சுட்ட கதை’ மாதிரி, எம்ஜிஆர் நடித்த பல படங்களின் அடிநாதமே இதுதான். ஆனால் இதை விஜய் சேதுபதியின் மார்க்கெட்டுக்கும் இமேஜுக்கும் ஏற்ப மாற்றுகிறேன் என்று திரைக்கதையை ‘கொத்துக்கறி’ ஆக்கியிருப்பதுதான் நம்மை சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இலக்கில்லாத திரைக்கதை!

கதைக்கும் திரைக்கதைக்கும் என்ன வேறுபாடு என்று கேள்வி கேட்கும் ரசிகனுக்கு, இப்படத்தைக் காட்டினால் தானாக உண்மை விளங்கிவிடும்.

சடாமுடியுடன் ஊர் திரும்பும் பக்கிரி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. யார் இந்த பக்கிரி? ஆறு ஆண்டு காலமாக அவர் எங்கிருந்தார்? திடீரென்று அவர் மீண்டும் எண்ட்ரி கொடுக்க என்ன காரணம்? எந்த கேள்விக்கும் விடையளிக்காமலேயே திரைக்கதை விரிகிறது.

போட்டியே இல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்து உடனடியாகத் தலைவரான பக்கிரி, கொள்முதல் செய்ய காத்திருக்கும் கரும்புகளை வெட்ட உத்தரவிடுகிறார். சர்க்கரை ஆலைக்குள் விவசாயிகள் நால்வரை அழைத்துச் சென்று, அதன் செயல்பாட்டை விளக்கிச் சொல்கிறார்.

பெருமுதலாளிகள் பிடியிலிருக்கும் பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்து, அதனை உழைக்கும் மக்களுக்குத் தருகிறார். அவர்களது நிலங்களை கூட்டுப் பண்ணை முறையில் இணைத்து, அதில் நெல் பயிரிட வைக்கிறார்.

கூட்டுப்பண்ணை முறை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்ட கிளாராவின் (ஸ்ருதி ஹாசன்) நடனக்குழுவை வரவழைக்கிறார்.

பருத்திக்கு விலை நிர்ணயிக்கும் ‘மாஃபியா’வின் பிடியை மீறி, பெருவிலையொன்றை நிர்ணயிக்கிறார். இந்தியா முழுக்கவுள்ள பருத்தி விவசாயிகள் அதனை முன்மாதிரியாக எடுத்துக் கொள்கின்றனர்.

விவசாய சங்கத்திலுள்ள லாக்கரில் பணம் அடுக்கடுக்காக உயர, திடீரென்று ஒருநாள் அந்த பணம் காணாமல் போகிறது. அதனை பக்கிரியும் அவரது நண்பர்களும் எடுத்துச் சென்றதாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகிறது. அவ்வளவுதான்..

வில்லன் வணங்காமுடி (ஜகபதிபாபு) உடனடியாக சங்கத்தைக் கைப்பற்றி, முன்னாள் தலைவர் என்றழைக்கப்படும் அவமானத்தைப் போக்க முனைகிறார்.

தலைமறைவாகும் பக்கிரியும் அவரது நண்பர்களும் தந்தி அனுப்பும் முறையைப் பயன்படுத்தி, ஊரின் நிலைமையை அறிந்துகொள்கிறார்.

இந்தக் கொடுமைகள் போதாது என்று, இறுதியில் வணங்காமுடியின் பேச்சைக் கேட்டு ஏழைகளைக் கொன்று குவிக்கும் போலீஸ் அதிகாரியைச் சுட்டுத் தள்ளுகிறார் பக்கிரி. கீழ்நிலையில் இருக்கும் போலீசாரோ அல்லது அந்த நபரின் மேலதிகாரிகளாக இருப்பவர்களோ, இதற்கு எத்தகைய எதிர்வினை புரிகின்றனர் என்பது நமக்குத் தெரிவதே இல்லை.

லாபம் திரைக்கதை பழைய படங்களைப் பார்த்தது போலிருக்கிறது என்று சொல்வதுகூட ஒருவகை அவமரியாதைதான். ஏனென்றால், 80களில் வந்த ‘பழிக்குப் பழி’ வகையறா படங்களில்கூட திரைக்கதைக்கு இலக்கென்று ஒன்று இருக்கும். இதில், அப்படியொரு விஷயம் இல்லவே இல்லை.

நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்ததால், திரைக்கதை எழுதிய ஆலயமணி தவிர்த்து எத்தனை பேர் இப்பணியில் ஈடுபட்டார்களென்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.

வீணடிக்கப்பட்ட உழைப்பு!

நாயகியாக வரும் ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதியின் நண்பர்களாக வரும் கலையரசன், நிதிஷ் வீரா, ரமேஷ்திலக், டேனியல் போப் மற்றும் வில்லன்களாக வரும் ஜகபதிபாபு, ஓ.ஏ.கே.சுந்தர், சண்முகராஜன் என்று பலரும் திரையில் தோன்றும்போது ;எதற்காக இந்த காட்சி’ என்ற கேள்வி எழுகிறது. விஜய் சேதுபதி குளோஸ்அப்பில் வசனம் பேசும்போதெல்லாம் ‘ரொம்ப பழைய படத்தைப் பார்க்கிறோமோ’ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

இக்கதையில் சாய் தன்ஷிகா எதற்கு வருகிறார் என்பது, அவரைப் போலவே நமக்கும் தெரியவில்லை.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி, படத்தொகுப்பாளர்கள் என்.கணேஷ்குமார், எஸ்.பி.அகமது, இசையமைப்பாளர் டி.இமான், கலை இயக்குனர் செல்வகுமார் தொடங்கி பெரும்குழுவின் உழைப்பு ரசிகர்களை முழுதாகச் சென்றடையத் தவறியிருக்கிறது. ரசிகர்களைத் தியேட்டருக்கு வரவழைக்கும் அளவுக்கு இப்படைப்பு அமையவில்லை என்பதே உண்மை.

லாபம் என்பது விவசாயிகளுக்கு எட்டாததாக இருக்க இடைத்தரகர்களும் பெருநிறுவன முதலாளிகளுமே காரணம் என்பதைத் தானறிந்த கருத்துகளின் வழியே சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். அதனைத் திரையில் சொல்லும்போது யதார்த்தமும் சினிமாதனமும் எந்தளவுக்கு இருக்க வேண்டுமென்று முடிவு செய்வதில் கோட்டை விட்டிருக்கிறார்.

தான் மதிப்பு கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கு மரியாதை செலுத்த விரும்பும் விஜய் சேதுபதி, அது எத்தகைய வெற்றியைப் பெற வேண்டுமென்பதையும் கட்டாயம் திட்டமிட்டிருப்பார். அப்படிப் பார்க்கையில் எஸ்.பி.ஜனநாதனின் படைப்புக்கு உயிர் கொடுப்பதற்காகத் தயாரிப்பு பொறுப்பை ஏற்றவர், திரைக்கதையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இயற்கை தொடங்கி வெற்றிப்படங்களான ஈ, பேராண்மையிலும் கூட எஸ்.பி.ஜனநாதன் திரைக்கதையைக் கையாளும் பொறுப்பை வேறொருவரிடம் தந்திருந்தார். அதேநேரத்தில், அவர் எடுத்துக்கொண்ட கதைக்கருக்களும் களங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

பிரச்சார நெடியுடன் கூடிய திரை மொழியை மீறி பேசுபொருளாயின. ஆனால் ‘புறம்போக்கு என்ற பொதுவுடைமை’ போல ‘லாபம்’ படமும் அந்த வரிசையில் இருந்து விலகியிருப்பது வருத்தம் தரும் விஷயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *