தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் அப்பாவிகளுக்கு மட்டுமா?

தற்போது நாடளாவிய ரீதியில் லொக்டவுன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சிறிய தேநீர் கடைகள் சாப்பாட்டுக் கடைகள் துணிக்கடைகள் மூடப்பட்டுள்ளன. வயிற்றுப் பிழைப்புக்கா மீறித் திறக்கப்படும் சிறிய கடைகள் மீது காவல் துறையினர் பாய்கிறார்கள்.
அண்மையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி கடைகளைத் திறந்து வைத்திருந்தார்கள் என்று சில சிறிய கடைகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு இடத்தில் வைத்து விற்கக் கூடாதாம் சனம் நிறைய சேர்ந்தால் கொரோனா கொத்தணி உருவாகி விடுமாம். சந்தைக்கு அண்மையில் வைத்து மீன்களை விற்ற வியாபாரிகள் விரட்டப்பட்டதை நானே கண்டுள்ளேன். வீட்டிலேயே நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை. ஒன்று கூடல் தடை.

சரி இவை தேவை தான்
கோவிட் கட்டுப்பாட்டுக்கு மேலுள்ளவை தேவைதான். அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ஏழை வியாபாரிகள் மீது பாய்பவர்கள் சாராய வியாபாரிகளை கண்டு கொள்ளாமல் விடுவது ஏன்?

தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று மீண்டும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்ட நிலையில் மதுபான நிலையங்கள் திறக்கப்பட அனுமதி என்ற கதையும் மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்ற செய்தியும் திட்டமிட்டு பரப்பப்பட்டதாக இருக்கலாம். மக்கள் கோவிட் வந்து செத்தாலும் பரவாயில்லை ( இவர்கள் ஏற்கனவே குடித்து செத்தாலும் பரவாயில்லை என்று சாராயத்தை விற்பவர்கள் தானே கொரோனா வந்து மக்கள் சாவதைப் பற்றியா கவலைப்படப் போகிறான்கள்) நாங்கள் காசு பார்க்க வேண்டும் என்று பிணந் தின்னி கழுகுகள் போல காத்திருந்தவர்கள் சாராய கடைகளை திறந்தார்கள்.

குடும்பம் பட்டினியாகக் கிடந்தாலும் பரவாயில்லை என்று இருக்கிற காசையும் கரியாக்க மதுப்பிரியர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சாராயக் கடைகள் எங்கும் நீக்கமற நிறைந்தார்கள்.

சாராயக் கடைகள் எங்கும் சனத்திரள். அப்பாவி மீன் வியாபாரிகளை கலைத்த யாரும் இந்த மதுப்பிரியர்களை கலைக்கவும் முன்வரவில்லை. இவ்வளவு சனம் திரளக் காரணமாயிருந்த சாராய வியாபாரிகளின் மீது எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதற்கும் யாருக்கும் முதுகெலும்பில்லை.

பணபலத்தால் அதிகார பலத்தால் போதை வியாபாரிகள் தப்பலாம். ஆனால் குடியால் சீரழிந்த அபலைகளினதும் மழலைகளினதும் சாபத்திலிருந்து இலகுவில் தப்பமுடியாது

மருத்துவர் யதுநந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *