2 நாளில் 2 லட்சம் கோடியை இழந்த கோடீஸ்வரர்!

சீன அதிபர் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால், அந்நாட்டில் இருக்கும் கோடீஸ்வரர்கள் பெரிய இழப்பை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் அதிபரான ஜி ஜின் பிங் சமீபகாலமாக பல்வேறு புதிய விதிகளை அங்கு அமுல்படுத்தி வருகிறார். அதில் குறிப்பாக, சீன ஆண்கள் சிலர் தென்கொரியா பிடிஎஸ் ஸ்டைல் பாப் பாடல்களை, நடனங்களை ஆடுவதால் அது தொடர்பான நடன நிகழ்ச்சிக்கு தடை விதித்தார். அதைத் தொடர்ந்து, ஆண்கள் பெண்கள் போல லிப் ஸ்டிக் எல்லாம் போடுவதாக குற்றம் சாட்டி அதற்கும் தடையும் விதித்தார்.

மேலும், குழந்தைகள் கேம் ஆடும் நேரத்தை வாரத்திற்கு மூன்று மணி நேரம் என்று குறைத்துள்ளார். இப்படி தொடர்ந்து பல விதிமுறைகளை அவர் அமுல்படுத்தி வருகிறார்.

அப்படி அமுல்படுத்தப்பட்ட முக்கியமான விதிதான் சமமான பொருளாதாரம் அல்லது பொதுவான வளம் தொடர்பான சட்டம். இந்த சட்டத்தின்படி பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கு அதிக வரி வசூலிப்பது. மக்களுக்கான அடிப்படை ஊதியத்தை உயர்த்துவது.

பணக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட சலுகைகளை மொத்தமாக தடை செய்வது. அரசின் நலத்திட்டங்களில் பணக்காரர்களை முதலீடு செய்ய வைப்பது என்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதாவது பணக்காரராக்களிடம் இருக்கும் பணத்தை பிடுங்கி அரசு செலவுக்கு பயன்படுத்துவது மற்றும் மக்களுக்கு கொடுப்பது தான் இந்த திட்டத்தின் பிளான். இந்த நடவடிக்கையால் சீனாவின் மொத்த பங்கு சந்தையும் புதிய சரிவை சந்தித்துள்ளது.

சீனாவின் பெரிய நிறுவனங்கள் பல லட்சம் கோடிகளை பங்கு சந்தையிலும், சந்தைக்குவெளியிலும் இழந்து வருகிறது. பொதுவான வளம் தொடர்பான சட்டம் காரணமாக 500 நிறுவனங்கள் இதுவரை அங்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்புகளை சந்தித்து இருக்கிறது.

சீனாவை சேர்ந்த கோலின் ஹயான் என்ற கோடீஸ்வரர் அங்கு 2 லட்சம் கோடி ரூபாய் வரை கடந்த இரண்டு நாட்களில் இழப்பை சந்தித்துள்ளார். இவரின் நிறுவனம் பங்கு சந்தையிலும், பங்கு சந்தைக்கு வெளியிலும் குறிப்பிட்ட இழப்பை சந்தித்துள்ளது.

அவர் பின்டியோடியோ என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருகிறார். அங்கு பொதுவான வளம் தொடர்பான சட்டம் மூலம் ஆன்லைன் வர்த்தகம் பெரிய அடி வாங்கி உள்ளது. பொருட்களின் விலை குறைந்துள்ளது.

இதன் காரணமாக அலி பாபா உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே கோலின் ஹயானுக்கு சொந்த பின்டியோடியோ நிறுவனமும் 2 லட்சம் கோடி ரூபாய் கடந்த இரண்டு நாட்களில் இழந்துள்ளது.

இந்த நிறுவனம்தான் ஜி ஜின்பிங் விதியால் சீனாவில் அதிக அளவு இழப்பை சந்தித்த நிறுவனம் என்று அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்று 500 நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன.

அதில் இந்த நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இன்னொரு நிறுவனமான ஹாய் கா யான் என்ற கோடீஸ்வரருக்கு சொந்தமான எவர்கிராண்டே குரூப் என்ற நிறுவனம் 1.17 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது.

இதனால் இந்த நிறுவனங்களின் அமெரிக்க கிளைகளின் பங்குகளும், மற்ற நாடுகளில் உள்ள பங்குகளும் சரிவை சந்தித்துள்ளது.

அலிபாபா நிறுவனம் மொத்தமாக 33 சதவிகித இழப்பையும், டென்சென்ட் நிறுவனம் 20 சதவிகிதம் இழப்பையும் சந்தித்துள்ளது. இந்த புதிய சட்டம் மூலம், சீனாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் எல்லோரும் இழப்பை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *