நாடு திறக்கப்படுமா? தீர்மானிக்க கலந்துரையாடல் இன்று!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா தடுப்பு தேசிய செயலணியுடன் இந்த  கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

நாட்டில் கொரோனா  பரவலைகட்டுப்படுத்துவதற்காக  ஓகஸ்ட் மாதம் 20  திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகாரிக்காத வகையில்,  சில கட்டுப்பாடுகளின் கீழ் நாடு மீண்டும் திறக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

எனினும், இது தொடர்பான தீர்மானம், இன்றைய தினமே மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் சுகாதார நிலைமைகளை ஆராய்ந்து சுற்றுலா துறை உள்ளிட்ட நாட்டின் அத்தியாவசிய சேவைகளுக்காக  தளர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முக்கிய வருமான ஆதாரமாக  காணப்படும்  சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது அவசியம் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்,

எனவே, சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைய அதிகபட்ச சாத்தியமான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மரணங்களின்  எண்ணிக்கை மற்றும் ஒக்ஸிஜன் பயன்பாடு ஆகியவற்றை ஒப்பிட்டு அதற்கு அமைவாக சில தளர்வுகளை ஏற்படுத்துவதற்கு  எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, நாட்டில் தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு செயல்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் தற்போதும் சுற்றுலா தறைசார்ந்து செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், குறித்த வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *