இலங்கை முஸ்லிம் மக்களுக்கு அரசியல் அடையாளத்தை பெற்றுக் கொடுத்த தலைவர் அஷ்ரப்

இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்த அரசியல் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் காலமாகி இன்றுடன் 21வருடங்கள் பூர்த்தியாகின்றன. முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்ட போது தனது இனத்துக்காக குரல் கொடுக்கமுடியாதவர்களாக அந்த முஸ்லிம் தலைவர்கள் காணப்பட்டார்கள். அந்நிலையை மாற்றியமைத்தவர் அஷ்ரப்.

எம்.எச்.எம். அஷ்ரப் சம்மாந்துறையில் முஹம்மத் ஹுசைன்- மதீனா உம்மாஹ் தம்பதிகளுக்கு 1948.10.23 ஆம் திகதி சம்மாந்துறையில் பிறந்தார். கம்பளையைச் சேர்ந்த பேரியல் இஸ்மாயில் என்பவரை திருமணம் செய்தார்.

திருமணத்துக்குப் பின்பு கல்முனை அம்மன் கோவில் வீதியில் தமிழர்களின் எல்லைப் பிரதேசத்திலேயே வாழ்ந்து வந்தார். தனது ஆரம்பக் கல்வியை கல்முனைக்குடி அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் பயின்று, பின்பு கல்முனை பாத்திமா கல்லூரி, கல்முனை உவெஸ்லி உயர் பாடசாலை மற்றும் கொழும்பு அலெக்ஸ்சாண்டிரியா கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்பு சட்டக் கல்லூரிக்கு தெரிவான அவர், 1975 ஆம் ஆண்டு அரச சட்டத்தரணியாக நியமனம் பெற்றார்.

அஷ்ரப் தனது ஆரம்ப கால அரசியலை தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து ஆரம்பித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் உயர்பீட உறுப்பினராக இருந்த அஷ்ரப், அக்கட்சிக்காக மேடைகளில் பிரசாரங்களில் ஈடுபட்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் அரசியல் பயணத்தை மேற்கொண்டாலும் முஸ்லிம்களின் தனித்துவத்தை எந்தச் சந்தர்ப்பத்திலும் அஷ்ரப் அவர்கள் விட்டுக் கொடுத்ததில்லை. அன்றைய சில முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுடன் சேர்ந்து முஸ்லிம் ஐக்கிய முன்னணியில் முஸ்லிம்களின் தனித்துவ அரசியலை முன்னெடுக்க அவர் முற்பட்டார். ஆனால் அவருடன் முஸ்லிம் ஐக்கிய முன்னணியில் பயணித்த அனைவரும் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார்கள்.

இந்நிலையிலேயே தனது சமூகத்தின் தனித்துவத்தை உறுதியாகப் பேணும் பொருட்டு எம்.எச்.எம். அஷ்ரப் ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ என்னும் அரசியல் இயக்கத்தை 1981.09.21 ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பாலர் பாடசாலை மண்டபத்தில் வைத்து ஆரம்பித்தார். அப்போது இக்கட்சி முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று இருக்கவில்லை. விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே கூட்டத்துக்கும் சமுகமளித்தார்கள்.

1987ம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் மூலம் வடக்கும் கிழக்கும் ஒரே மாகாணமாக இணைக்கப்பட்ட போது, முஸ்லிம் காங்கிரசின் செயற்பாட்டினை எம்.எச்.எம். அஷ்ரப் தீவிரப்படுத்தி 1988.02.11 ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை ஒரு அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்தார்.

1988 இல் நடைபெற்ற வடகிழக்கு மாகாணசபை தேர்தலில் விடுதலை புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தனித்துப் போட்டியிட்டு 168,038 வாக்குகள் பெற்றதுடன் பதினேழு மாகாணசபை உறுப்பினர்களை பெற்றிருந்தது.

அதன் பிரதிபலிப்பாக அன்றைய பிரதமர் ஆர். பிரேமதாஸ, அஷ்ரப்பை அழைத்து ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்ட அஷ்ரப், பிரேமதாசாவிடம் நிபந்தனை விதித்தார்.

அரசியல் யாப்பில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தினை பாதிக்கின்ற தேர்தல் விகிதாசார முறையில் 12.5 சதவீதமாக இருந்த வெட்டுப்புள்ளியை ஐந்து சதவீதமாக குறைக்கச் செய்யுமாறு கோரப்பட்டதுதான் பிரேமதாசாவுக்கு அஷ்ரப் வித்தித்த அந்த நிபந்தனையாகும்.

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு பத்து நாட்களே இருந்த நிலையில் அஷ்ரப் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

அஷ்ரப்பின் இந்த தீர்க்கதரிசனமான செயற்பாட்டின் மூலம் சிறுபான்மை சமூக கட்சிகள் மட்டுமல்ல, பெரும்பான்மை சமூகத்தில் காணப்படுகின்ற சிறிய கட்சிகளும் பாராளுமன்றம் செல்லக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் முதன்முதலாக பொதுத்தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு நாடு முழுவதிலுமிருந்து 202,016 வாக்குகளை பெற்று நான்கு ஆசனங்களை பெற்றது. அஷ்ரப் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு முதன் முதலாக பாராளுமன்றம் சென்றார்.

1989 ஆம் ஆண்டு தொடக்கம் 1994 ஆம் ஆண்டு வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது. ஒவ்வொரு பாராளுமன்ற அமர்விலும் முஸ்லிம் மக்களுக்காக அஷ்ரப் துனிச்சலுடன் உரை நிகழ்த்தியிருந்தார்.

தனது அயராத உழைப்பினால் முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் ஓர் தனித்துவ தேசிய இனம் என்பதை உள்நாட்டில் மட்டுமல்ல தர்வதேசமும் அங்கீகரிக்கும் வகையில் தனது செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தார்.

தலைவர் அஷ்ரப் அவர்கள் தனது தீவிர அரசியல் செயற்பாட்டினை ஆரம்பித்து பல சாதனைகளையும், வரலாற்று தடயங்களையும் ஏற்படுத்தினார். 1994.07.01 ஆம் திகதி திருமதி சந்திரிகாவுடன் அஷ்ரப் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு அவ்வாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆட்சியில் அமர்த்துவதற்கு கைகொடுத்தார். அத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஏழு பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. யாழ்பாணம் மாவட்டத்திலிருந்தும் முஸ்லிம் காங்கிரசுக்கு ஓர் ஆசனம் கிடைக்கப் பெற்றது. இத்தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும், பேரம் பேசும் சக்தியாக தன்னை நிரூபித்துக் காட்டினார்.

பத்தாவது பாராளுமன்றத்தில் கப்பல், துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராக பதவி ஏற்று துறைமுக அதிகார சபையிலும், மற்றும் ஏனைய திணைக்களங்களிலும் ஏராளமான இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கினார்.

அத்துடன் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கென்று 1995.10.23 ஆம் திகதி ஒலுவில் பிரதேசத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் ஒன்றினையும் நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இனப்பிரச்சினைத் தீர்வின் போது முஸ்லிம்களுக்கென்று தென்கிழக்கு அலகு என்னும் கோரிக்கையை முன்வைத்தார். அதுவே அவரது கனவாகவும் இருந்தது. அஷ்ரப் ஓர் சிறந்த அரசியல்வாதியாக மட்டுமல்லாது, சிறந்த சட்டத்தரணியாகவும், சிறந்த கவிஞராகவும் தன்னை அடையாளப்படுத்தி இருந்தார். அவர் எழுதிய கவிதை தொகுப்பான ‘நான் எனும் நீ’ என்ற கவிதை நூல் இதற்கு உதாரணம் ஆகும்.

அஷ்ரப் ஆதரவுடன் மீண்டும் சந்திரிகா 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதியானார். அதன் பின்பு 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான பொதுஜன முன்னணியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபடும் பொருட்டு 16.09.2000ஆம் திகதி உலங்கு வானூர்தி மூலம் அம்பாறையை நோக்கி அஷ்ரப் பயணித்துக் கொண்டிருந்த போது வானூர்தி வெடித்து சிதறியதன் மூலம் உயிரிழந்தார்.

முகம்மத் இக்பால்
(சாய்ந்தமருது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *