திருமணப் பதிவு இல்லாத வழக்காற்றுத் திருமணம் இங்கு செல்லுபடியாகுமா?

– பஸ்றி ஸீ. ஹனியா
LL.B (Jaffna)

திருமணம் என்ற விடயம் அனைவரினதும் வாழ்க்கையிலும் அரங்கேறும் மிக முக்கியமான விடயமாகும்.

அவ்வாறான திருமணத்தில் பலவிதமான திருமணங்களை நாம் கண்டிருக்கின்றோம்.

திருமணங்கள் அனைத்துமே ஒரே மாதிரியாக நடைபெறுவதில்லை. அவை பல அடிப்படைகள் வேறுபட்டதாகவே காணப்படுகின்றன. ஆகவே, திருமணங்கள் பற்றிய சந்தேகங்கள் எழுவது வழக்கம்தான்.

அவ்வாறான சந்தேகத்தில் இன்றைய புரிதலானது பதியப்படாத திருமணங்கள் சட்ட ஏற்புடையதா என்பதனை ஆராய்வதாகும்.

இலங்கையில் திருமணம்
தொடர்பான சட்டம்

இலங்கையில் பல்லின, பல மதங்களைக் கொண்டவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் கலாசாரத்துக்கு அமைவாக திருமணச் சட்டங்கள் இருக்கின்றன. அதாவது கண்டிய சிங்கள மக்களுக்கு கரையோர சிங்கள மக்களிலிருந்து வேறுபட்ட சட்டமும், முஸ்லிம்களுக்கு அவர்களின் மதம் சார்ந்த இஸ்லாமிய சட்டமும், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேசவழமைச் சட்டமும் இருப்பதுடன் எல்லோருக்கும் பொதுவான சட்டமாக பொது திருமண சட்டமும் (General Marriage Ordinance) உண்டு.

வழக்காற்றுத் திருமணம்
என்றால் என்ன?

பல நூற்றாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள், மத விழுமியங்களின் அடிப்படையில் திருமணம் நடத்தப்படுதலை இது குறிக்கும்.

இலங்கையின் சுதேச சட்டங்களாக தேசவழமைச் சட்டம், கண்டிய சட்டம், முஸ்லிம் சட்டம் ஆகியன காணப்படுகின்றன. இத்தகைய சட்டங்களுக்கும் வழக்காற்றுத் திருமணங்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றி பின்வருமாறு  நோக்குவோம்.

வழக்காற்றுத் திருமணத்தை
கண்டிய சட்டம்
ஏற்றுக்கொள்கின்றதா?

இலங்கையில் கண்டிய சட்டத்தால் ஆளப்படுபவர்கள் கண்டிய சட்டத்தின் கீழ் பதிவுத் திருமணம் செய்தால் மட்டுமே சட்ட வலிதுடைமை உள்ளவர்களாகக் கருதப்படுவார்கள். இந்தப் பதிவுக்கான நடைமுறைகள் 1952ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க கண்டிய விவாக, விவாகரத்துச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, இங்கு வழக்காற்றுத் திருமணங்கள் ஏற்கப்படுவதில்லை.

பொதுவாக இலங்கையின் மத்திய மாகாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருபவர்கள் கண்டிய சட்டத்தால் ஆளப்படுபவர்கள். இருவரும் கண்டிய சட்டத்தால் ஆளப்பட்டால் மட்டுமே கண்டிய சட்டத்தின் கீழ் பதிவுத் திருமணம் செய்ய முடியும்.

வழக்காற்றுத் திருமணத்தை
இலங்கையின் முஸ்லிம் சட்டம்
ஏற்றுக்கொள்கின்றதா?

இலங்கையில் முஸ்லிம் சட்டத்தால் ஆளப்படுபவர்கள் பதிவுத் திருமணம் செய்வது பற்றிய நடைமுறைகளை 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டம் உள்ளடக்கியுள்ளது.

இங்கும் இருவரும் முஸ்லிம் சட்டத்தால் ஆளப்பட்டால் மட்டுமே அந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியும்.

இந்தச் சட்டத்திலுள்ள ஒரு ஏற்பாடு முஸ்லிம் சட்டத்தின் கீழ் வழக்காற்றுத் திருமணத்தை ஏற்பதாக உள்ளது. அதாவது “திருமணம் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்துக்காக அந்தத் திருமணம் செல்லுபடியற்றதானது எனக் கருதக்கூடாது” என்று கூறியுள்ளனர்.

முஸ்லிம் மக்கள் ‘நிக்காஹ்’ சடங்கு நிறைவேற்றி செய்யப்பட்ட வழக்காற்றுத் திருமணத்தை செல்லுபடியானதாகக்  கருதுகின்றனர்.

வடக்கில் வசிக்கும் மக்களின்
தேசவழமைச் சட்ட திருமணம்
செல்லுபடியானதா?

வழக்காற்றுத் திருமணம் ஒன்றின் செல்லுபடியாகும் தன்மையைத் தீர்மானிக்க நீதிமன்றங்கள் வழக்காற்று சம்பிரதாயங்களுக்கும், சடங்குகளுக்கும் அமைவாகத் திருமணம் நடைபெற்றுள்ளனவா எனப் பார்க்கும். அதன்படி நடைபெற்றால் அவை சட்டபூர்வமான திருமணமாக ஏற்கப்படும்.

வடக்கு மாகாணத்தில் இந்து மதகுரு முன்னிலையில் தாலி கட்டி, உறவினர்கள் முன்னிலையில் சமய சடங்குகள் இடம்பெற்றால் அந்த வழக்காற்றுத் திருமணம் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.

தேசவழமை சட்டத்தால் ஆளப்படாத
இந்து சமயத்தவரின்
வழக்காற்றுத் திருமணம்
செல்லுபடியானதா?

இது தொடர்பாக நீதிமன்றங்கள், குறித்த பிரதேசத்தில் எவ்வகையான சடங்குகள் பின்பற்றப்படுகின்றனவோ அவற்றை நடைமுறைப்படுத்தி செய்யப்பட்ட வழக்காற்றுத் திருமணங்கள் செல்லுபடியான திருமணங்கள் எனக் கூறியுள்ளன.

கிறிஸ்தவர்கள் தொடர்பான
வழக்காற்றுத் திருமணம்
செல்லுபடியானதா?

தேவாலயத்தில் மதகுரு முன்னிலையில் சமயச் சடங்குகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட வழக்காற்றுத் திருமணம் சட்ட ரீதியானதாகும்.

கண்டிய சட்டத்தால் ஆளப்படாத
பௌத்த மதத்தவரின்
வழக்காற்றுத் திருமணம்
செல்லுபடியானதா?

பௌத்தர்களுடைய வழக்காற்றுத் திருமணத்தில் ‘போருவ’ சடங்கு இடம்பெற்றால் அது செல்லுபடியான திருமணமாகக் கருதப்படும்.

மேலே கூறப்பட்ட விடயங்களுக்கு அமைவாக இலங்கையில் கண்டிய சட்டத்தால் ஆளப்படுபவர்களைத் தவிர ஏனைய உள்ளூர் சட்டத்தால் ஆளப்படுபவர்களுக்கு வழக்காற்றுத் திருமணம் சட்ட வலிதுடைமை பெறும்.

இவ்வாறானதொரு சட்டம் உருவாக்கப்பட்டது பதிவு செய்யாமல் செய்யப்பட்ட திருமணங்கள் சட்ட வலிதற்றதாக ஆகக்கூடாது என்ற நோக்கத்திலேயே ஒழிய, பதிவு செய்யப்படாத திருமணங்கள் செய்வது சரியானது எனக் கருதக் கிடையாது.

மேலும் திருமணம் என்பது சமூகத்தின் அடிப்படை அலகு ஆகும். திருமணத்தின் மூலம் இருவர் மட்டும் அல்லாது ஒரு சமூகமே உருவாக இருக்கின்றது.

ஆகவே, எதிர்காலச் சந்ததியினருக்குச் சரியான சட்டரீதியான அந்தஸ்து கிடைக்க வேண்டுமானால் திருமணங்களைப் பதிவு செய்தல் என்பது அத்தியாவசியமானதாகும்.

இதேவேளை, திருமணங்களின் மூலம் சொத்துப் பரிமாற்றமும் நடைபெறும். அவ்வாறு சொத்துக்கள் சரியான முறையில் போய்ச் சேர வேண்டும் என்றால் திருமணப் பதிவு என்பது இன்றியமையாதது. ஆகவேதான், மேலே விபரிக்கப்பட்ட சட்டமானது முன்னைய காலத்தில் திருமணம் செய்து இற்றை வரைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மாத்திரமே ஒழிய எதிர்காலத்தில் வாழப் போகின்றவர்களும் இந்தச் சட்டத்தைப் பின்பற்றி நடத்தல் என்பது  பெரும் தவறாகும். மேலும், என்றைக்கும் வாழ்க்கையில் பெரும் பங்கை வகிக்கும் திருமணம் சட்ட வலிதுடையதாக  இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் வாழ்க்கையும் சரியான முறையில் செல்லும் என்பது திண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *