முக்கிய பிரமுகர்கள் தங்கியிருந்த வைத்தியசாலையில்
கைக்குண்டு இளைஞன் அதிரடி கைது!

கைக்குண்டு மீட்கப்பட்ட கொழும்பு நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நீர்பாசன அமைச்சரும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் சகோதரருமான சமல் ராஜபக்ஸ, குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவும், அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகின்றது.

இந்த நிலையில், வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமரா காணொளியின் ஊடாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தமிழ் இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைக்குண்டை கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணை நடத்தும் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

திருகோணமலை – உப்புவெளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைக்குண்டின் பாதுகாப்பு ஆணியை கழற்றி, நுளம்பு சுருளொன்றை இணைத்து, வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்கப்பட்டுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞன், வைத்தியசாலைக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் கட்டட நிர்மாணப் பணிகளில் கடமையாற்றியுள்ளமை தெரிய வந்துள்ளது.

குறித்த இளைஞன், இந்த வேலைத்தளத்திற்கு இரு வாரங்களுக்கு முன்னரே வருகைத் தந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத் தடுப்பு பிரிவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *