மலிங்காவுக்கு நன்றி கூறி பிரியாவிடை கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து மும்பை இந்தியன்ஸ் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டு வரலாற்றில் மிகச்சிறந்த டெத்-ஓவர் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மலிங்கா, இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அவர் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில், இன்று, இலங்கை வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா, காம்படீடிவ் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். முன்னதாக, மலிங்கா 2011 இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டில், வங்கதேசத்தின் ஆர். பிரேமதாசா மைதானத்தில் ஆடிய கடைசி ஆட்டத்துடன் அவர் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.

டி-20 போட்டிகளில் தான் ஓய்வு பெறுவதை மலிங்கா தனது அதிகாரப்பூர்வ யு-டியூப் சேனல் மூலம் அறிவித்தார். இந்த வீடியோவில், இலங்கை கிரிக்கெட்டுக்கு (SLC) மலிங்கா நன்றி தெரிவித்தார். மேலும் மும்பை இந்தியன்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் கென்ட் கிரிக்கெட் கிளப் போன்ற தனது ஃபரான்சைஸ்களுக்கும் மலிங்கா வீடியோவில் நன்றி தெரிவித்துள்ளார்.”கடந்த 17 ஆண்டுகளில் நான் பெற்ற அனுபவம் இனி இங்கு தேவைப்படாது. ஏனெனில் நான் டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன். கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். ஆனால் நான் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு தொடர்ந்து ஆதரவாக இருப்பேன். இந்த விளையாட்டை விரும்பும் அனைவருடனும் நான் எப்போதும் இருப்பேன், “என்று மலிங்கா கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து மலிங்கா விளையாடிய ஐபில் அணியான மும்பை இந்தியன்ஸ் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது. மலிங்கா ஓய்வு குறித்து மும்பை இந்தியன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- டி20 கிரிக்கெட்டில் மலிங்கா எல்லாவற்றையும் சாதித்துவிட்டார். டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து, அவரிடம் கூற எங்களிடம் இவை மட்டுமே உள்ளன. “நன்றி மலிங்கா”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *