“தலைவி” திரைப்படம் யாரைத் திருப்தி படுத்துகிறது?

இயக்குநர் ஏ.எல்.விஜய் வெளிக்கொண்டு வந்திருக்கும் ‘தலைவி’ திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிற கதை அம்சம் பற்றி மட்டுமே இதில் அலசலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சாவித்ரியின் வாழ்வைச் சொல்லும் ‘நடிகையர் திலகம்’ படம் சாவித்ரியை முதன்மைப்படுத்தி நடிகர் ஜெமினியைக் கீழிறக்கி இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்தன.

ஜெமினியின் உறவினர் தரப்பில் இருந்து கூட எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன என்பது பலருக்கு நினைவிருக்கும்.

ஜெயலலிதா பற்றி ஏற்கனவே வெப்சீரியலின் ஒரு பகுதி மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் – தற்போது ‘தலைவி’ திரைப்படம்.

எழுத்தாளர் அஜயன் பாலாவின் ‘தலைவி’ புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருப்பதாகத் துவக்கத்திலேயே சொல்லப் பட்டிருந்தாலும்,

இதில் ஜெயலலிதா பெயரை ‘ஜெயா’ என்றாக்கி, எம்.ஜி.ஆரை எம்.ஜே.ஆர் ஆக்கி, கருணாநிதியை  ‘கருணா’ என்றாக்கி “நாங்கள் நேரடியாக அவர்களைச் சொல்லவில்லை” என்பதாகத் தப்பித்தலுக்கு ஒரு பாவனை காட்டியிருக்கிறார்கள்.

அ.தி.மு.க பெயரைக் கூட மாற்றியிருக்கிறார்கள். ஜெயாவை கூடுதலாக மிகைப்படுத்தி, மற்றவர்களைச் சிறுமைப்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயா அவமானப்படுத்தப்பட்டு விரித்த தலைமுடியோடு ‘சபதம்’ போடுவதாகத் துவங்கும் காட்சியிலிருந்தே இந்த மிகைப்படலம் துவங்கிவிடுகிறது.

அந்தத் தாக்குதல் நடந்த அன்று சட்டமன்றத்தில் நடந்த வன்முறையைப் பார்த்த நேரடிச் சாட்சிகள் பலர் இருக்கிறார்கள்.

அன்றைக்கு கருணாநிதியை நோக்கிய தாக்குதல் நடந்ததும், உடைந்த கண்ணாடியுடன் அவர் வெளியே வந்ததையும் அல்லவா சேர்த்துக் காண்பித்திருக்க வேண்டும்.

அப்படி அல்லாமல் நாடகரீதியான ‘சபதமான’ காட்சியிலேயே துவங்கும் மிகை தொடர்ந்து விரிகிறது.

ஜெயா ஆரம்பத்தில் நடிக்கவரும் எம்.ஜே.ஆர் அரங்கிற்குள் நுழைகிறார். ஒரு நாற்காலியில் உட்கார்ந்தபடி புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார் ஜெயா. அவருடைய அம்மா எழுந்து வணக்கம் சொல்லச் சொல்கிறார்.

மறுநாள் அதே அரங்கில் உள்ளே நுழையும் எம்.ஜே.ஆர் முதற்கொண்டு எல்லோருக்கும் கைகுவித்து “வணக்கம்” சொல்லும் ஜெயா ஒரு நாய்க்குட்டிக்கும் அதே வணக்கத்தைச் செலுத்துவதாகக் காட்டியிருக்கிறார்கள்.
இதே ஜெயாவின் வாழ்வைப் பற்றி நூல்கள் எழுதிய யாரும் இப்படி ஜெயா நடந்ததாகத் தெரிவித்திராத நிலையில், எப்படி இப்படியொரு கீழ்மைப்படுத்தும் காட்சியை வைத்தார்கள்? தெரியவில்லை.

முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் சரியாகத் தான் இந்தக் காட்சிக்குத் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். ஆர்.என்.வீ.யாக வரும் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தைக் கிட்டத்தட்ட வில்லனுக்கு இணையாகவே ஆக்கிவிட்டார்கள்.

சிவாஜியுடன் ஜெயா நடிக்கப் போனதையும், அவருடைய புறக்கணிப்பினால் போனதாகக் காட்டியிருக்கிறார்கள்.

அதைப் போல ஜெயலலிதாவுக்கு மக்களிடம் இருக்கும் அபரிமிதமான செல்வாக்கினால், அவரை எம்.ஜே.ஆர் மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்காக கலைநிகழ்ச்சி நடத்த அழைப்பு விடுத்ததாகவும்,

எம்.ஜே.ஆருக்குப் புகழைத் தேடித் தந்த பள்ளிக்கூட மதிய நேரத்துச் சத்துணவுத் திட்டத்தை ஜெயா புகுந்து ஒழுங்குபடுத்திக் கொடுத்ததாகவும் பல காட்சிகள் ஜெயாவின் புகழை உயர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கலாம்.

அதே நேரம் மற்றவர்களின் உயரத்தைக் குறைக்கிறது என்பதையும் உணர வேண்டாமா?

இராமாவரம் தோட்டத்தில் எம்.ஜே.ஆரின் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வை எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவியை வைத்தே எடுத்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? சாதுர்யம் என்றா? இயக்குநரின் பொருத்தமான தேர்வு என்றா?

எம்.ஜே.ஆர் மறைவதற்கு முன்பு ஜெயாவிடம் பேசி அவருடைய வீட்டிற்குச் சாப்பிட வருவதைப் போல சொல்லி, அவர் வராமல், அவருடைய மறைவுச் செய்தி வந்திருப்பதை எல்லாம் எந்த ஆதாரத்தை வைத்து காட்சியாக எடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை.

தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜானகி அம்மையாரின் அரசியல் ஒதுங்கலைப் பற்றிச் சொல்கிற திரைப்படத்தில், எந்த நிபந்தனையும் இல்லாமல், இரு அணிகளாகப் பிரிந்திருந்த கட்சியை இணைக்க ஒப்புக் கொண்டு உதவினார் என்கிற வரலாறு எல்லாம் படத்தை எடுத்தவர்களுக்குத் தெரியுமா?

ஜானகி அம்மையாரின் சொந்த இடத்தில் தான் கட்சி அலுவலகம் இன்று வரை இருக்கிற யதார்த்தம் எல்லாம் புரியுமா?

இறுதிக் காட்சியில் முதல்வர் பதவியில் அமர்ந்த பிறகு “என்னை அம்மாவாக நினைக்கிறவங்க என் கூட இருங்க.. என்னை ஒரு பொம்பிளைன்னு நினைச்சா?” என்றதும்,

முன்னால் நிற்கிற கரை வேட்டிக் கட்சிக்காரர்கள் அனைவரும் தன்னால் இயன்ற அளவுக்குத் தலையைக் குனிந்து வணங்குகிற காட்சியுடன் நிறைவடைகிறது  ‘தலைவி’ திரைப்படம்.

நல்ல பயோபிக் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக நமக்கு முன்னால் மம்முட்டி நடித்த “பாபாசாகேப் அம்பேத்கர்” போன்ற அருமையான திரைப்படங்கள் இருக்கின்றன.

ஆனால் ‘தலைவி’ திரைப்படம் உண்மையான சம்பவங்களைப் பின்னணியாகக் கொள்ளாமல், உண்மையைச் சொல்வதைப் போன்ற பாவனையை மட்டுமே வெளிபடுத்தியிருக்கிறது.

அந்த விதத்தில் யாரைத் திருப்திப்படுத்த எடுக்கப்பட்டிருக்கிறது  ‘தலைவி’ திரைப்படம்? ஜெயாவின் விசுவாசிகளையா? அவரது தொண்டர்களையா? அல்லது எம்.ஜி.ஆரின் தொண்டர்களையா? அல்லது அ.தி.மு.க.வினரையா?

இந்தத் திரைப்படம் இவர்கள் யாரையும் திருப்திப்படுத்தாது என்பதே உண்மை.
அசலைச் சரிவரப் பிரதி எடுக்காத நிழலை எப்படி வரலாற்றுப் படம் என்று மதிப்பிட முடியும்? சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *