ஊசியில்லா கொரோனா தடுப்பூசி ஒக்டோபரில் அறிமுகம்!

ஜைடஸ் கெடில்லா நிறுவனத்தின் “ஊசியில்லா கொரோனா” தடுப்பூசியான ஜைகோவ்-டி மருந்து ஒக்டோபர் முதல்வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ள ஜைகோவ்-டி தடுப்பூசியை அவசரகாலத்துக்குப் பயன்படு்த்திக்கொள்ள கடந்த மாதம் 20 ஆம் திகதி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்தது.

ஜைகோவ்-டி தடுப்பூசி உலகிலேயே முதன்முதலாக பிளாஸ்மா டிஎன்ஏ தடுப்பூசியாகும். கொரோனா வைரஸுக்குத் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பூசி என்பது ஜைடஸ் கெடிலா நிறுவனத்துடையது மட்டும்தான்.

கொரோனாவுக்கு எதிராக இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கு அதிக பாதுகாப்பும், திறன்மிக்கதாகச் செயல்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3 டோஸ்களைக் கொண்ட இந்தத் தடுப்பூசி, 28 மற்றும் 56 நாட்கள் இடைவெளியில் செலுத்த வேண்டும். 12 வயதுமுதல் 18 வயதுள்ள பிரிவினருக்காக இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜைடஸ் கெடில்லா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஷர்வில் படேல் கூறுகையில் “ செப்டம்பர் நடுப்பகுதியில் தடுப்பூசி விநியோகத்தை தொடங்கிவிடுவோம், ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து எங்கள் தடுப்பூசி கிடைக்கத் தொடங்கும்.

மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி தடுப்பூசி வீதம் விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். படிப்படியாக எங்கள் தயாரிப்பை உயர்த்தி மாதத்துக்கு 4 கோடி முத்ல 5 கோடி அளவுக்கு உற்பத்தியை அதிகரிப்போம்” எனத் தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் 18வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு கோவாக்ஸின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்தியாவில் 5 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக், மாடர்னா, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *