தீவிரவாதத்தை வென்றதா அமெரிக்கா? இரட்டைக் கோபுர தாக்குதல் 20ஆம் வருட பூர்த்தி!

செப்ரம்பர்-11, அமெரிக்க இரட்டைக் கோபுர விமான தாக்குதலின் 20 ஆம் வருட பூர்த்தி இன்று

நான்கு அமெரிக்க விமானங்களை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 19 பேர் கடத்தினார்கள். இரண்டு விமானங்கள் நியூயோர்க் நகரத்தில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைக் கோபுரங்களின் மீதும், ஒரு விமானம் வோஷிங்டனில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமையிடமான பென்டகன் மீதும் மோதின. நான்காவது விமானம் கட்டுப்பாடு இழந்து பென்சில்வேனியாவில் உள்ள வெட்டவெளியில் தரையில் மோதி வெடித்துச் சிதறியது.

அச்சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இந்தத் தாக்குதல்களில் 3,000 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தோரும் கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம், யூதம், பௌத்தம் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரும், பெரும் செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர், லிஃப்ட் ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அடங்குவார்கள். தொழில்நுட்பரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் சர்வ வல்லமை கொண்ட அமெரிக்காவில் இப்படியொரு தாக்குதல் நிகழ்ந்தது அமெரிக்காவை மட்டுமல்ல உலகையே அசைத்துவிட்டது.
20-ம் நூற்றாண்டில் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் போல 21-ம் நூற்றாண்டின் துயர அடையாளங்களுள் ஒன்றாக இரட்டைக் கோபுரத் தகர்ப்பு மாறியது.

அமெரிக்காவுக்கு எதிராக பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் தலைமையில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உலகெங்கும் முஸ்லிம்கள் மீது வெறுப்பு அதிகமானது. செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான போரைத் தொடங்குவதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்தத் தாக்குதலுக்குக் காரணமான பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான்கள் அடைக்கலம் கொடுத்திருந்தனர். பின்லேடனைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி தலிபானை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. ஆனால், பின்லேடனை ஒப்படைக்க தலிபான் மறுத்தது. இதன் தொடரச்சியாக 2001 ஒக்டோபரில் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா, அடுத்த சில வாரங்களிலே ஆட்சியிலிருந்து தலிபானை விரட்டியடித்து, அந்த நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

2011 இல் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாதில் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, அமெரிக்கப் படை ஆப்கானிலிருந்து படிப்படியாக வெளியேறத் தொடங்கியது. எனினும், முழுமையாக வெளியேற 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதச் செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா, ‘உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை’ (Department of Homeland Security) என்றொரு துறையை உருவாக்கியது.
20 வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்த துயர சம்பவத்தில் உயிர் தப்பியவர்களின் மனதில் இன்னுமே அந்த அச்சம் குடிகொண்டிருக்கின்றது. அவர்கள் அச்சம்பவத்தை இன்னுமே இவ்வாறு நினைவு கூருகின்றனர்.

உலகின் தூங்காத நகரம் என வருணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் இதே திகதியில் 20 வருடங்களுக்கு முன்னர் காலை 8:46 மணியளவில் அதிர்ந்தது. வீதியில் நிற்பவர்கள் அதிர்ந்து போய் வானளவு உயரத்தில் இருக்கும் இரட்டைக் கோபுரங்களை அதிர்ந்து பார்க்கிறார்கள். இந்த அதிர்ச்சிக்குக் காரணம், ஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்து இரட்டைக் கோபுரத்தை நோக்கிப் பறக்கிறது. சில செக்கன்களில், இரட்டைக் கோபுரத்தின் வடக்கு கட்டடத்தின் இடைப்பட்ட பகுதியில் விமானம் மோதி வெடித்துச் சிதறியது.

வோஷிங்டனில் இருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் பறந்த அமெரிக்க ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம்தான் இரட்டை கோபுரத்தின் மீது மோதியது.

தொடர்ந்து 18 நிமிடங்கள் இடைவெளியில், அதாவது காலை 9:03க்கு மற்றொரு விமானம் இரட்டைக் கோபுரத்தின் தெற்கு கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த விமானமும் அதே வோஷிங்டன் விமான நிலையத்தில் இருந்து 56 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட்டது.

இந்தத் தாக்குதலையடுத்து கட்டடங்கள் சரியத் தொடங்கின. தாக்குதல் காரணமாக இரட்டைக் கோபுரத்தில் ஏற்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்தது. நியூயோர்க் வான் முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது. கட்டடங்கள் தெருக்களில் சரியத் தொடங்கின. ஆயிரக்கணக்கான மக்கள் கட்டடங்களில் சிக்கிக் கொண்டிருந்தது ஒருபுறமிருக்க, வீதிகளில் சென்றவர்கள் மீதும் கட்டடத்தின் பாகங்கள் விழத் தொடங்கின.

என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. மற்றொரு விமானம் மீண்டும் வந்து தாக்குதல் நடத்தி விடுமா எனத் தெரியவில்லை. நகரம் முழுவதும் அழுகுரல்கள். இந்தக் காட்சிகளை அமெரிக்காவிலிருந்து செய்தி அலைவரிசைகள் நேரலை செய்தன. சற்று மணி நேர வித்தியாசத்தில் அடுத்த தாக்குதல் நடந்தது. ஆனால், இந்த முறை இரட்டை கோபுரத்தின் மீது அல்ல.

அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பெண்டகன் மீதாகும். அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே உறைந்து போனது. அனைவரும் இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பு எது என்பதைத் தேடத் தொடங்கினர். தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது அல் கொய்தா. 19 பேரைக் கொண்டு இந்த தாக்குதலை அல் கொய்தா நடத்தியது.

இந்த நேரத்தில் 4வதாக மற்றொரு விமானம் கடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. எந்த இடத்தில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் பென்சில்வேனியா மாகாணம் அருகே வெட்டவெளியில் விழுந்து நொருங்கியது. இது குறித்து பின்னாளில் வெளிவந்த தகவலின்படி, 4 ஆவதாக கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பயங்கரவாதிகளுடன், அதில் வந்த பயணிகள் சண்டையிட்டதன் காரணமாகவே வெட்ட வெளியில் விழுந்து நொருங்கியது என அதிகாரிகள் கூறினர்.

இந்த விமானம் தாக்கச் சென்ற இடம் எது என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது. இந்த தாக்குதல் தொடர்பாகப் பல ஆவணப்படங்கள் வெளி வந்தன. அல் கொய்தா பயங்கரவாதஅமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை பிடித்து கொடுப்பவர்களுக்கு அமெரிக்க டொலர் 25 மில்லியன் சன்மானமாக வழங்குவதாக ஓர் அறிவிப்பை எப்.பி.ஐ அப்போது வெளியிட்டிருந்தது.

அந்த தாக்குதலில் 19 பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 2, 996 பேர் உயிரிழந்தனர். தாக்குதலால் இரட்டைக் கோபுரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்களில் 300 பேரும் உயிரிழந்தவர்களின் பட்டியலில் அடங்குவர். உலகில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் உயிர்களும் பிரிக்கப்பட்டிருந்தன. இந்த தாக்குதலால், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதத் தலைவர் ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானில் மறைந்து இருப்பதை அறிந்து அமெரிக்கா அதிரடியாக விமானங்களின் மூலம் இராணுவத்தை அனுப்பி கொலை செய்தது. ஒசாமா பின் லேடன் 2011ஆம் ஆண்டும் மே 2ஆம் திகதி கொல்லப்பட்டார். இந்த நாள் அமெரிக்காவின் வரலாற்றின் கறுப்பு தினமாகவே அன்றைய நாள் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *