அடுத்தடுத்து மனைவியும் மகளும் மர்மமாக உயிரிழப்பு தோண்டி எடுக்கப்பட்ட சடலம்!

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி புத்தளம் வேப்பமடு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்ட 56 வயதுடைய நபர் ஒருவரின் ஜனாஸா புத்தளம் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான் அசேல டி சில்வா முன்னிலையில் நேற்று (10) காலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் வேப்பமடுவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முஹம்மட் நிஸ்தார் (வயது 56) என்பவரின் ஜனாஸாவே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை 4 ஆம் திகதி தனது வீட்டில் காலமான குறித்த நபர், அன்றைய தினமே வேப்பமடு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

எனினும், குறித்த நபர் உயிரிழந்து இரண்டு நாட்களின் பின்னர் 6ஆம் திகதி திங்கட்கிழமை காலை அவரது மனைவி சித்தி அஜீபா (வயது 51) மற்றும் அவரது மகள் பாத்திமா சஹானா (வயது 37) திங்கட்கிழமை நண்பகல் வேளையிலும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

ஒரேநாளில் உயிரிழந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரினதும் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பீ.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது அவ்விருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு உயிரிழந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரது ஜனாஸாக்களும் கடந்த புதன்கிழமை (08) புத்தளத்திலிருந்து நல்லடக்கத்திற்காக ஓட்டமாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், மனைவிக்கும், மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமையால், ஒரே வீட்டில் இருந்து முதலாவதாக கடந்த 4ம் திகதி உயிரிழந்த முஹம்மட் நிஸ்தார் (வயது 56) என்பவருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக சுகாதார பிரிவினர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், வேப்பமடு பகுதியிலுள்ள முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள முஹம்மட் நிஸ்தார் என்பவரின் ஜனாஸாவை தோண்டியெடுத்து, பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு புத்தளம் பொலிஸார், புத்தளம் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த நபருடைய ஜனாஸா புத்தளம் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான் அசேல டி சில்வா முன்னிலையில் நேற்று (10) காலை தோண்டி எடுக்கப்பட்டது.

இதன்போது புத்தளம் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி. குமாரதாச உட்பட பொலிஸ் அதிகாரிகளும், மணல்தீவு பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் தனஞ்சய மனோஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பீ.சி.ஆர். பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டது. இதன்போது குறித்த நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள குறித்த ஜனாஸா இன்று (11) சனிக்கிழமை (11) புத்தளத்திலிருந்து குருநாகலுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து நல்லடக்கத்திற்காக ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *