பெண் பொலிஸ் பாலியல் பலாத்காரம் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க கோரிக்கை!

இந்தியாவில் 50 இடங்களில் கத்திகுத்தி காயங்களுடன், மார்பகங்கள் அறுக்கப்பட்டு இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவன் பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ள போதிலும் இவ்வழக்கில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.

டெல்லி சங்க விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ராபியா சைஃபி (21). இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். கடந்த மாதம் 27-ம் திகதி பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று கொலை செய்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் ராபியாவின் உடலை மீட்டனர். அப்போது அவரது உடல் மிகக் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அவரை குறைந்தது 4 நபர்களாவது கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

பணிக்கு சேர்ந்த நான்கு மாதங்களே ஆன அந்த பெண் காவல் அதிகாரி, ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மேலும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உடலில் குறைந்தபட்சம் உடலில் 50-க்கும் மேற்பட்ட கத்தி குத்துகள் உள்ளன. உடல் கிழிக்கப்பட்டுள்ளது. மார்பகங்கள் வெட்டப்பட்டுள்ளன. பெண்ணுறுப்பு மிக மோசமான நிலையில் சிதைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட பெண்ணுடன் வசித்துவந்ததாகக் கூறப்படும் நிஜாமுதீன் என்பவர்மீது பொலிசாருக்கு சந்தேகம் எழவே, நிஜாமுதீனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர்.

ஆனால் நிஜாமுதீன் ராபியாவை கொலை செய்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், ராபியாவும் நானும் பல வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில் அவளின் பெற்றோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்தோம்.

என்னுடைய வீட்டாரைக் கூட மறந்துவிட்டு, காதலிதான் முக்கியம் என்று அவளைக் கரம் பிடித்தேன். அவளும் அரசாங்கப் பணியில் சேர்ந்தாள். வாழ்க்கை நன்றாகவே நகர்ந்துகொண்டிருந்தது. ஆனால், சமீபகாலமாக அவளின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிந்தன. அவள் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக எனக்குத் தெரிந்தது. அது குறித்துக் கேட்டபோது, எங்கள் இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது.

பலமுறை சொல்லியும் அவள் கேட்கவில்லை. அதனால் கடந்த 27-ம் திகதி பணிமுடிந்து திரும்பிக்கொண்டிருந்த அவளை ஃபரிதாபாத்தின் சூரஜ்குண்ட் பகுதிக்கு அழைத்துச் சென்றேன். பின்னர், இருவருக்கும் இடையே நீண்டுகொண்டே சென்ற வார்த்தை மோதல்கள் ஒருகட்டத்தில் கொலையில் முடிந்தது.

அவளை நான் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டேன் என கூறியுள்ளார். ஆனால் ராபியாவை பலர் சேர்ந்து பலாத்காரம் செய்த தடயம் இருப்பதால் நிஜாமுதீன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. சரணடைந்த நிஜாமுதீனிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராபியாவின் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகளுக்கு திருமணமே ஆகவில்லை. நிஜாமுதீன் ராபியாவின் நண்பன் ஆவாr. அவர் எங்கள் வீட்டுப் பெண்ணை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பின்னர் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார்.

இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையில் யாராவது பெரும்புள்ளிகளை காப்பாற்ற பொலிசார் இப்படி செய்கிறார்களா எனவும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

ராபியா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழ்க்கப்பட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *