அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஐனாதிபதி அறிவுறுத்தல்!

அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத பாரிய அளவிலான நெல் ஆலைகளின் களஞ்சியசாலைகளில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த களஞ்சியசாலைகளில் காணப்படும் அரிசியை அவசரகால நிலைமையின் கீழ் கைப்பற்றி, கட்டுப்பாட்டு விலைக்கு சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அரிசிக்காக கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், சந்தையில் அரிசியின் விலை குறைவடையவில்லை என ஜனாதிபதியிடம் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், நுகர்வோர் விவகார அதிகார சபை, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் உணவுத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த விடயம் தொடர்பில் உடனடியாக திட்டமொன்றை உருவாக்குமாறும், அமைச்சர் பந்துல குணவர்தனவிடம்  ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நெல் தொகையை அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு கொள்வனவு செய்து சிறிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கி, அரிசியை கட்டுப்பாட்டு விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *