Zoom லென்ஸ் கொண்டு உருவான முதல் தமிழ் சினிமா!

பிரபல நடிகர் சி.எல்.ஆனந்தன் ஹீரோவாக நடித்த படம் ‘விஜயபுரி வீரன்’. அதற்கு முன் ஸ்டண்ட் நடிகராகவும் நடனக் குழுக்களில் இடம்பெறுகிறவராகவும் இருந்தவர் அவர்.

‘த த்ரீ மஸ்கடீர்ஸ்’ என்ற ஆங்கில ஆக்‌ஷன் படத்தைத் தழுவி உருவான ‘விஜயபுரி வீரன்’ படத்தில், விறுவிறுப்பான கத்திச் சண்டையில் கலக்கிய ஆனந்தனுக்கு அந்தக் காலக்கட்டத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள்.

அவர் போடும் சண்டைகளுக்கெனவே தனி ரசிகர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சி.எல்.ஆனந்தன் யாரென்றால், நடிகை டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரி ஆகியோர் தந்தை.

‘விஜயபுரி வீரன்’ ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே அதிரடியாக நூறு நாட்களுக்கு மேல் ஓட, அடுத்தடுத்து அவருக்கு வந்த வாய்ப்புகளில் ஒன்று ‘வீரத்திருமகன்’.

இந்தப் படத்தில், அதுவரை குழந்தை நட்சத்திரமாகவே நடித்துவந்த சச்சு ஹீரோயினாக அறிமுகமானார். கதை, வசனம், உதவி இயக்கம் என சில படங்களில் பணிபுரிந்த ஏ.சி.திருலோகசந்தர், இயக்குநராக அறிமுகமான படமும் இதுதான்.

ஆனந்தன் ஹீரோவாக நடித்த விஜயபுரி வீரன் படத்துக்கும் திருலோக சந்தர்தான் திரைக்கதை, வசனத்தை எழுதியிருந்தார்.

‘வீரத்திருமகன்’ படத்துக்கு ஆரூர் தாஸின் வசனம் படத்துக்குப் பெரிய பலமாக அமைந்தது. இதுவும் ஆக்‌ஷன் படம் என்பதால், படத்தைத் தயாரித்த ஏ.வி.எம் நிறுவனம் புதிதாக ஒன்றை செய்தார்கள்.

அதாவது ஃபேமிலி டிராமா படங்களை மட்டுமே அப்போது அதிகமாக தயாரித்து வந்த ஏ.வி.எம் நிறுவனம், முதன்முறையாக தயாரித்த அதிரடி ஆக்‌ஷன் படம் இது.

அதனால், முருகன் பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன்மூலம் இந்தப் படத்தைத் தயாரித்தார்கள்.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் கண்ணதாசனின் வரிகளில், பாடல்கள் அனைத்தும் ஹிட்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்’, ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ ஆகிய பாடங்கள் இப்போது கேட்டால் தனி ரசனையைத் தருபவை.

பி.பி.ஸ்ரீனிவாசின் சூப்பர் ஹிட் பாடல்கள் வரிசையில் இந்தப் பாடல்கள் எப்போதும் தனி இடம்பிடித்திருக்கின்றன.

‘ரோஜா மலரே’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால், இந்தப் படத்தின் விளம்பரத்தில் ரோஜா மலரே ராஜகுமாரி என்ற வார்த்தையை பெரிதாகப் போட்டு, வீரத்திருமகன் என்பதை சிறியதாக போட்டிருந்தார்கள்.

ஸூம் லென்ஸ் பயன்படுத்தி முதன்முதலாக உருவாக்கப்பட்ட படம் இது. அந்தக் காலக்கட்டத்தில் இது பெரிய விஷயமாகப் பேசப்பட்டது.

–நன்றி ;அலாவுதீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *