86 வயதில் 10 ஆம் ஆண்டு பரீட்சை எழுதிய முன்னாள் முதல்வர்!

86 வயதில் 10ஆம் வகுப்பு பரீட்சை எழுதிய அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, அந்த தேர்வில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரியானா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் துணைப் பிரதமர் சவுதாரி தேவிலாலின்  மகனான ஓம் பிரகாஷ் சவுதாலா (86). முன்னாள் முதல்வரான இவர், ஆசிரியர் நியமன  ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து தற்போது அவரது வீட்டில் வசிக்கிறார். டெல்லி திகார் சிறையில் இருந்த காலகட்டத்தில், மாநில அடிப்படை கல்வித் திட்டத்தின் மூலம் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்.

ஆனால், அவரால் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை. பலமுறை தேர்வெழுதியும் ஆங்கில தாளில் தோற்றார். தற்போது சிறையில் இருந்து வெளியே வந்ததால், மீண்டும் ஆங்கில தாளை எழுத ஆயத்தமானார். அதற்காக, சிறப்பு ஆசிரியர்களை கொண்டு ஆங்கில பாடங்களை தொடர்ந்து படித்தார். கடந்த ஆக. 18ஆம் திகதி ஆங்கில தாளுக்கான தேர்வை எழுதினார்.

தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட போது, அவர் ஆங்கில பாடத்தில் 88 சதவீத மதிப்பெண்கள் பெற்றதாகவும், 10ஆம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாநில கல்வி வாரிய தலைவர் டாக்டர் ஜாக்பீர் சிங் கூறுகையில், ‘பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சவுதாலாவுக்கு, தொலைபேசி மூலம் தேர்வு முடிவை அறிவித்து வாழ்த்து தெரிவித்தேன். கடந்த முறை ஆங்கில பாடத்தில் 54 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தார்.

தற்போது 88 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவர், 10ம் வகுப்பு முடிக்காமல் 12ஆம் வகுப்பு படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். இருந்தாலும், 10ஆம் வகுப்பு முடித்த பின்னரே, 12ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியும் என்று கூறியதால், விடுபட்ட ஆங்கில தாளை எழுதி தேர்ச்சி பெற்றார். இனிமேல், அவர் 12ம் வகுப்பு தேர்வை எழுதலாம்’ என்றார். இந்நிலையில், வயதுக்கும், கல்விக்கும் இடைவெளி கிடையாது என்பதை ஓம் பிரகாஷ் சவுதாலா நிரூபித்துள்ளார் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *