சீனிக்கு அவசரகால சட்டம் என்றால் யுத்தம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் பொன்சேகா கேள்வி!

மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மக்களை அடக்குவதற்கே இந்த அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அரிசி, சீனிக்கு அவசரகால சட்டம் கொண்டுவருகின்றீர்கள் என்றால் யுத்தம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு்ள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சட்டவிரோதமாக சம்பாதித்த பணம், வரி செலுத்தப்படாது வைத்திருந்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் செயற்பாடே நிதி அமைச்சரினால் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலத்தின் ஊடாக நடக்கவுள்ளது.

வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள பணத்தை அங்கேயே முதலீடு செய்து அந்த பணத்திற்கு இங்கு சட்ட அந்தஸ்தை பெற்றுக்கொள்ளலாம். இங்கு சட்டப்படி வணிகம் செய்து முறையாக நடப்பவர்களுக்கு இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் நிலைமை ஏற்படலாம்.

இங்கு இப்படி செய்கையில் பாகிஸ்தானில் இதுபோன்று சட்டவிரோத பணத்தை வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கின்றனர். அப்படி இங்கு செய்தால் அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கைக்கொள்ள முடியும்.

இதேவேளை அவசரகால சட்டம் தொடர்பில் கூறுவதானால் இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கை பேணுவதற்கே அவசரகால சட்டம் இதுவரையில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இப்போது அரிசி, சீனி கொள்ளையை தடுக்க அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்மூலமே அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க முடியுமென்று கூறுகின்றனர். இதனை நம்ப முடியாது. நுகர்வோர் சட்டங்கள் இருக்கும்போது, அவசரகால சட்டம் அவசியமற்றது.

இந்த விடயத்திற்கு அவசரகால சட்டத்தை கொண்டு வருகின்றீர்கள் என்றால் யுத்தம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று தெரியவில்லை. அப்போது அதிகாரத்தை கைப்பற்றும் புதிய சட்டங்களை கொண்டுவருவதற்கு தேடி அலைய வேண்டி வரலாம்.

மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மக்களை அடக்குவதற்கே இந்த அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இப்போது மக்கள் புதிதாக சிந்திக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் சிறைச்சாலைகளுக்கு பயமில்லை. அங்கு செல்ல அவர்கள் தயாராக இருக்கின்றர். இளைய தலைமுறை சட்டத்திற்கு மதிப்பளிப்பதை தவிர, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு கௌரவமளிக்க தயாராக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *