பிரேத பரிசோதனையில் திடீர் திருப்பம் சசிகலா, எடப்பாடியை விசாரிக்க வாய்ப்பு!

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் அளித்துள்ள முதல் தகவல் அறிக்கைக்கும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் முரண்பாடுகள் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக  அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில், 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு நடந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் கடந்த மாதம் 17ம் தேதி மீண்டும் போலீசார் முன் ஆஜராகி பல்வேறு தகவல்களை அளித்தார்.

இது இவ்வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, சாலை விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணனையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். இதன் காரணமாக மீண்டும் கொடநாடு கொலை வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், தற்போது காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டதில் போலீசார் அளித்துள்ள அறிக்கைக்கும், மருத்துவ குழுவினர் அளித்துள்ள பிரேத பரிசோதனை முடிவுக்கும் இடையே முரண்பட்ட தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின்படி, ஓம்பகதூர் உடலில் 7 இடங்களில் வெட்டு காயம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், மருத்துவ குழுவினர் அளித்த பிரேத பரிசோதனை முடிவில் ஓம்பகதூர் உடலில் ரத்த காயங்கள் ஏதும் இல்லை. மூச்சுத்திணறியே உயிரிழந்துள்ளார் என  கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொலை நடந்த நேரம் இரவு 12 மணி என்று ஒரு வாக்குமூலமும், 3 மணி என்று மற்றொரு வாக்குமூலமும் தெரிவிக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் காவலாளி இறப்பு நேரம் குறிப்பிடப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த முரண்பட்ட தகவல்களால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொடநாடு கொலை வழக்கு விசாரணை இன்று ஊட்டி நீதிமன்றத்தில் மீண்டும் வரும் நிலையில் இந்த முரண்பட்ட தகவல்கள் இவ்வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி, சசிகலாவை விசாரிக்க வாய்ப்பு: வக்கீல் பேட்டி
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமீனில் உள்ள தீபு, ஜித்தின் ஜாய் ஆகியோர் தரப்பு வக்கீல்களில் ஒருவரான விஜயன் அளித்த பேட்டி: கொடநாடு வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனவே, இவ்வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உட்பட 9 பேரிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதற்கான எண்ணை வழங்கி பட்டியலில் சேர்த்துள்ளது. எனவே, இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனுவை ஏற்றுக் கொண்டு இவர்களை விசாரிக்க அனுமதியளித்தால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உட்பட 9 பேரிடம் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்றார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *