பலதாரமணமும் சட்டமும்!

– பஸ்றி ஸீ. ஹனியா
LL.B (Jaffna)

பலதாரமணம் என்ற விடயம் பலருக்கும் புதிதல்ல. இருந்தபோதிலும் இற்றை வரைக்கும் பலதாரமணம் பற்றிய பல சந்தேகங்கள் மற்றும் சட்ட ரீதியான ஏற்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளும் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆகவேதான் இன்றைய புரிதல் பலதாரமணம் தொடர்பானதாகும்.

பல மனைவி மணம் அல்லது பலதார மணம் என்பது ஓர் ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் மண உறவு கொண்டு வாழ்வதாகும்.

ஒரு பெண் பல ஆண்களுடன் மண உறவில் கொண்டு வாழும் நடைமுறையும் இருந்ததாகவும் இருப்பதாகவும் சில ஆதாரங்களும் இருக்கின்றன. இவை அனைத்துமே பலதாரமணம் என்ற எண்ணக்கருக்குள் அடங்குவதே.

வரலாற்று நோக்கில், இம்முறையே உலகின் பெரும்பான்மையான சமுதாயங்களில் கடைப்பிடிக்கப்பட்டது.

நவீன சமுதாயங்கள் பலவற்றில், இம்முறை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதுடன், இத்தகைய மணமுறைக்குச் சட்டப்படியான ஏற்பும் இருப்பதில்லை.

எனினும், ஏதோ ஒரு வகையில் இந்தச் சமுதாயங்களிலும் பலமனைவி மண முறை இருந்துதான் வருகின்றது.

எது எவ்வாறாக இருந்தபோதிலும் இற்றைக்குப் பலதாரமணம் ஆனது அங்கீகரிக்கப்படுமா? இல்லையா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, ஆண்கள் பல திருமண உறவில் இருந்தாலும் பெண்கள் பல திருமண உறவில் இருக்க முடியாது என்ற விவாதமும் காணப்படுகின்றது.

எமது நாடானது ஒரு பல்கலாசார நாடு என்ற வகையில் பல கலாசார வழக்கங்களை ஒன்றிணைத்த அரசியல் யாப்பைக் கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையிலே சட்டத்தின் பார்வையில் பலதாரமணம் என்ற விடயத்தில் ஒரே வேளையில் பெண்கள் பல திருமண பந்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விடயமானது முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால், ஆண்களுக்கு ஒரே நேரத்தில் பல திருமண உறவுகளில் இருக்கும் நடைமுறையானது தடை செய்யப்பட்டிருந்த போதிலும் தனியார் சட்டமான முஸ்லிம் சட்டத்தில் அதற்கு மிகப் பெரியதோர் இடம் இருக்கின்றது.

எமது யாப்புச் சட்டத்தை விட தனியார் சட்டம் மேலோங்கும் என்பதனால் முஸ்லிம் தனியார் சட்டத்தில் பலதாரமணத்துக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவேதான், பலதாரமணம் என்ற விடயம் இலங்கையில் நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டம்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

முஸ்லிம் தனியார் சட்டத்தால் ஆளப்படாத எந்தவோர் இலங்கை குடிமகனுக்கும் பலதாரமணம் என்ற விடயம் பொருத்தம் ஆகாது..

ஒரே வேளையில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணப் பந்தத்தில் இருப்பவர்கள் குற்றம் செய்தவர்களாகக் கருதப்பட்டு அவர்களுடைய தண்டனையும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.

மதத்துக்குத்தானா குற்றமும் தண்டனையும் என்று கேள்வி இதனூடாக எழுந்தாலும் அது ஓர் இடத்தில் இருக்க, பலதாரமணத்தை அங்கீகரிக்கும் முஸ்லிம் தனியார் சட்டத்தை நோக்கினோமானால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு முஸ்லிம் ஆடவன் இன்னொரு விவாகம் செய்ய எண்ணினால் செய்வதற்கு குறைந்தது 30 நாட்களுக்கு முன்னதாகத் தான் வதியும் இடத்திலும், திருமணம் செய்ய எண்ணும் பெண் வதியும் இடத்திலும் தமது விருப்பத்தைத் தெரிவித்து அறிவித்தல் கொடுப்பதன் மூலம் மேலும் மூன்று திருமணங்களை ஒரே நேரத்தில் செய்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படுகின்றது.

ஆகவேதான் ஒரு முஸ்லிமான ஆடவர் ஒரே வேளையில் நான்கு பெண்களுடன் திருமண பந்தத்தில் இருப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இதே இடத்திலும் பெண்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

பல மனைவி மணம் பரந்த அளவில் உலகில் கைக்கொள்ளப்பட்டு வருவதற்கான காரணங்களை ஆராய்ந்த மானிடவியலாளர்கள் பலவிதமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையில் பாலுறவுத் துணைகளைக் கொண்டிருப்பதற்கான விருப்பு மனிதனில் அடிப்படைப் பண்பாக இருக்கின்றது எனவும், அதனால்தான் உலகளவில் பல மனைவி மணம் பரந்துள்ளது எனவும் சிலர் கூறுகின்றார்கள்.

இதைவிடப் பலவாறான காரணங்களும் எடுத்துக் காட்டப்படுகின்றன. வாழ்க்கைக்கான பொருளாதாரச் செயற்பாடுகளில், பெண்களின் பங்கு அதிகமாக இருக்கும் சமுதாயங்களில் பலமனைவி மணமுறை அதிக அளவில் இருப்பதாக மானிடவியலாளர்கள் கூறுகின்றார்கள். குறிப்பாக முற்காலத்தில் உணவு சேகரித்தல் போன்ற பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவில் பெண்களின் பங்களிப்பை வேண்டி நின்றன. இதனால் வசதி படைத்தவர்கள் பல பெண்களை மணந்துகொண்டனர்.

அடிக்கடி ஏற்படும் போர்களில் பெருமளவில் ஆண்கள் இறக்க நேரிடுவதால் – சமுதாயத்தின் பெண்களின் தொகை கூடுவதால் எல்லாப் பெண்களும் மணம் முடிப்பதை உறுதி செய்வதற்காகப் பல சமுதாயங்களில் பல மனைவி மணமுறை தேவைப்பட்டது எனச் சிலர் வாதிட்டனர். ஆனால், மக்கள் தொகைச் சமநிலை காணப்படுகின்ற சமுதாயங்களிலும் சில சமயங்களில் ஆண்கள், பெண்களைவிடக் கூடுதலாக இருக்கும் சமுதாயங்களிலும்கூட, பல.மனைவி மணமுறை பின்பற்றப்படுவது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஆண்கள் பலதார மணம் செய்வதை வரவேற்கத்தக்க ஒன்றாகவோ அல்லது கட்டாயம் ஒவ்வொரு ஆணும் பலதார மணம் செய்தாக வேண்டும் என்றோ முஸ்லிம் சட்டத்தில் கட்டளையிடப்படவில்லை. மாறாக ஒரு ஆண் தான் விபச்சாரத்துக்குக் சென்று விடுவோம் என்று அஞ்சினால் அவ்வாறு அந்த மானகேடான காரியத்தைச் செய்யாமல் இன்னொரு திருமணம் செய்துகொள்ள முஸ்லிம் சட்டம் அனுமதிக்கின்றது. அவ்வளவுதான்.

இருந்தபோதிலும் முஸ்லிம் சட்டத்தில் இருக்கும் இந்த ஒரு சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு இன்னும் பலரின் வாழ்க்கையை அழிப்பதும் நடந்துகொண்டேதான் இருக்கின்றது.

அதனால்தான் பலகாலமாக பலதாரமணம் என்ற விடயம் விவாதத்துக்குத் திறந்து விடப்பட்டிருக்கின்றது.

ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழ்கின்ற வாழ்க்கையானது அனைத்து விடங்களிலும் சரியாகப் போகின்றதா என்று கேட்டால் நிச்சயமாக அந்த வினா, விடை இல்லாத பதிலாகவே அமைந்திருக்கும்.

எமது நாட்டின் பொதுச் சட்டத்தின் அடிப்படையில் ஓர் ஆண், மனைவி தவிர்ந்த வேறு பெண்களுடன் பாலுறவில் இருப்பதானது தண்டனைக்குரிய குற்றமல்ல அல்லது ஒரு பெண், கணவன் தவிர்ந்த வேறு ஆண்களுடன் பாலுறவில் இருப்பதானது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படவில்லை. ஆனால், விவாகரத்துப் பெறுவதற்கான அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக அமைகின்றது.

ஆகவேதான் இதிலிருந்து தெளிவு பெறுவது என்னவென்றால் நாம் ஏற்றுக்கொண்டோமோ இல்லையோ ஆண்கள், பெண்களில் சிலர் ஒருத்திக்கு ஒருத்தன் என்ற உறவை நடைமுறைப்படுத்துவதில்லை.

பலதாரமணம் என்ற விடயத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமா என்ற கேள்வி விடை இல்லாததன் காரணமாக பலதார மணத்தை முற்றாக ஒழித்தாலும் அதனைச் சட்டம் அற்ற வழியில் பின்பற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் என்ற அனுமானம் ஒருபுறமிருக்க முஸ்லிம் சட்டத்தில் இருக்கும் இறுக்கமற்ற பலதாரமண நடைமுறையானது மாற்றப்பட வேண்டும் என்பது பலரது கருத்து.

காரணம் முஸ்லிம் சட்டத்தின் நடைமுறையைப் பொறுத்த வரைக்கும் முஸ்லிம் ஆடவன் பலதாரமணம் செய்ய முதலாவது மனைவியிடம் அறிவிக்க வேண்டுமே தவிர அனுமதி பெறத் தேவையில்லை. மேலும் அடுத்து திருமணங்கள் முடிப்பதற்கான காரணங்கள் சரியாகக் கூறப்பட வேண்டும் என்றோ அக் காரணங்கள் சரியாகப் பரிசீலித்துப் பார்க்கும் இறுக்கமான நடைமுறையோ பொருளாதார ரீதியில் அந்த ஆடவருக்கு இரண்டு குடும்பத்தைப் பராமரிக்கக் கூடிய வலிமை இருக்கின்றதா என்பதைப் பரீட்சிக்கும் நடைமுறையும் இற்றைக்கு கிடையாது. அதன் காரணமாகவே இன்று பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. பலதாரமணம் இறுக்கமான நடைமுறையில் பரீட்சிக்கப்பட்டால் இற்றைக்குப் பாதிக்கப்பட்டிருக்கும் பல பெண்களின் நிலையை எதிர்காலப் பெண்களுக்கு கொடுக்காமல் இருக்கும் என்பது திண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *