அரசாங்க கட்டணங்கள் அதிகரிப்பால் நெருக்கடியில் ஏர்டெல் நிறுவனம்!

பார்தி ஏர்டெல் நிறுவனம் உரிமை பங்குகள் மூலம் ரூ.21,000 கோடி திரட்ட முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான சந்திப்பில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் பல விஷயங்களை கூறியிருக்கிறார்.

“தொலைத் தொடர்பு துறையை பொறுத்தவரை அரசு கட்டணங்கள் மிக அதிகம். ரூ.100 சம்பாதித்தால் 35 ரூபாய் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர், “அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் கட்டணம் அதிகமாக இருப்பதால், நிறுவனத்தின் கடன் மிக அதிகளவில் உள்ளது. இதனால் முக்கியமில்லாத சொத்துகளை விற்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. சரியான நேரத்தில் இதனை செய்வோம். தொலைத்தொடர்பு துறையில் உள்ள கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கிறோம்.

ஒரு நபர் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ..200 என்னும் அளவில் உள்ளது. இதனை ரூ.300 ஆக உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். தொலைத்தொடர்பு கட்டணத்தை உயர்த்துவதற்கு நாங்கள் தயங்கவில்லை. சரியான நேரத்துக்காக காத்திருக்கிறோம்.

5ஜி சேவைக்கான ஏலம் அடுத்த ஆண்டில் வெளியாகும் என தெரிகிறது. 2023ஆம் நிதி ஆண்டுக்குள் 5ஜி சேவை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். அத்துடன், 5ஜி ஏலம் ஏற்கத்தக்க வகையில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார் அவர்.

தொடர்புடைய செய்தி: “5G இணைய சேவை தயார்; இனி சில நிமிடங்களில் முழு நீளப் படம் டவுன்லோட்” – ஏர்டெல் அறிவிப்பு!

ஒரு பங்கு ரூ.535 என்னும் விலையில் உரிமை பங்குகள் மூலம் நிதி திரட்ட பார்தி ஏர்டெல் முடிவெடுத்திருக்கிறது. இதனால், இன்றைய வர்த்தகத்தில் 4 சதவீதத்துக்கு மேல் பார்தி ஏர்டெல் பங்கு உயர்ந்து முடிந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *