புதிய நோய் அறிகுறிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவர்கள் அனுமதி!

இலங்கையில் இதுவரையில் “பல அமைப்பு அழற்சி நோய்க்குறி” என்று அழைக்கப்படும் கோவிட் நோய்க்கு பிந்திய நோய்க்குறியால் சுமார் 34 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அத்தகைய நோய்க்குறியுள்ள ஐந்து சிறுவர்கள், கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் பொறுப்பாளர், வைத்தியர் நளின் கித்துல்வத்த தெரிவித்துள்ளார்.

குறித்த நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 21 பேர் சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் பதிவாகியுள்ளனர்.ஆறு பேர் கராப்பிட்டிய மருத்துவமனையிலும் ,நான்கு பேர் கண்டி மருத்துவமனையிலும் பதிவாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம், தியத்தலாவ, குருநாகல் மற்றும் பதுளை பகுதிகளுக்கும் இந்த நோய் இப்போது பரவியுள்ளது என்று வைத்தியர் கூறியுள்ளார்.

எந்த ஒரு கோவிட் மாறுபாட்டாலும் பாதிக்கப்பட்ட, சிறுவர்கள், கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்த இரண்டு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகு இந்த பல அமைப்பு அழற்சி நோய்க்குறியால் பாதிக்கப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட, சிறுவர்களில் இரண்டு சதவிகிதம் இறக்க நேரிடும் என்று கூறிய அவர், சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால், குணப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

சிறுவர்களுக்கு காய்ச்சல், வயிற்று வலி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு, இரத்தக் கசிவு, தோல் சொறி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். இது குணப்படுத்தக்கூடிய நோய் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த புதிய நோய்க்குறி இப்போது பெரியவர்களிடமும் பதிவாகியுள்ளது, 40 அகவைக்குட்பட்ட இருவர் பலப்பிட்டிய மருத்துவமனையில் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.

எனவே இந்த நோய்க்குறி இலங்கையில் பெரியவர்களிடையேயும் பரவுகிறது என்று தாம் சந்தேகிப்பதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவின் பொறுப்பாளர் வைத்தியர் நளின் கித்துல்வத்த தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *