தலிபான்களுக்கு பயந்து பிரித்தானியாவுக்கு பறந்த விமானத்தில் 30ஆயிரம் அடி உயரத்தில் பிறந்த குழந்தை!

தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறிய ஆப்கன் பெண்மணிக்கு 30,000 அடி உயரத்தில் குழந்தை பிறந்துள்ளது.

ஆப்கானிஸ்தானை நீண்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் தாலிபான்கள் துப்பாக்கி முனையில் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கு நாட்டைவிட்டு வெளியேறும் காலக்கெடுவாக ஆகத்து 31ம் திகதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து, வெளிநாட்டவர்களுடன் உள்ளூர் மக்களும் பல ஆயிரக்கணக்கானோர் ராணுவ விமானங்களில் வெளியேற்றப்பட்டு வருகிறன்றர்.

அதில் பிரித்தானியாவுக்கு தப்பிய பெண்களில் ஒருவர் 26 வயதான சோமன் நூரி. காபூல் நகரில் இருந்து மீட்கப்பட்டு ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் இவரும் இருந்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, விமானம் துபாய் மாகாணத்தில் இருந்து புறப்பட்டு குவைத் வான்வெளியில் பறந்துகொண்டிருக்கும் போது வலி ஏற்பட்டுள்ளது.

அது துருக்கி நாட்டு விமானம். அப்போது அந்த விமானத்தில் மருத்துவர்கள் எவரும் பயணிக்கவும் இல்லை. இதனையடுத்து விமான ஊழியர்களே பக்குவமாக மகப்பேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

விமானம் அப்போது 30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக தாயும் சேயும் நலம் என்றே கூறப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் Havva என பெயரிட்டு மகிழ்ந்துள்ளனர்.

இதனிடையே, முன்னெச்சரிக்கையாக விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டிருந்தாலும், தாயும் சேயும் நலமுடன் இருப்பதை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து பர்மிங்காமிற்கு விமானம் புறப்பட்டது, பின்னர் பகல் 11.45 மணிக்கு பிரித்தானியாவில் தரையிறங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *