மாடியில் இருந்து விழுந்த பூனையை காப்பாற்றி நபருக்கு டுபாய் சேக் கொடுத்த பரிசு!

கேரளாவை சேர்ந்தவர்கள் பூனையை மீட்ட காட்சிகளை கண்ட துபாய்நாட்டின் துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் பூனையை மீட்ட 4 பேரை பாராட்டினார். துபாய் நாட்டில் டெய்ரா பகுதியில் அல் மராரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இக்குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த பலர் வசித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் வீட்டில் பூனை வளர்க்கிறார்கள். இந்த பூனைகள் வீட்டில் இருந்து அவ்வப்போது வெளியேறி, வீட்டின் சுவர்களில் ஏறி அங்குமிங்கும் நடைபோடுவது வழக்கம்.
சம்பவத்தன்று குடியிருப்பின் 3-வது மாடியின் பால்கனி பகுதியில் ஒரு பூனை அங்குமிங்கும் நடமாடி கொண்டிருந்தது. சுவற்றின் மீது ஏறி நடை போட்ட அந்த பூனை திடீரென 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்தது.
இதனை அந்த குடியிருப்பில் வசித்த கேரளாவின் கோதமங்கலம் பகுதியை சேர்ந்த நசீர் முகமது என்பவர் பார்த்து விட்டார்.
அவர் உடனே அங்கு குடியிருந்த கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்த அப்துல் ரசீத் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த மேலும் இருவரை தன்னுடன் அழைத்து அந்த பூனையை மீட்க முயற்சி மேற்கொண்டார்.
இதற்காக தன்னிடம் இருந்த டவலை பூனை விழும் பகுதியில் வலை போல் விரித்து பிடித்து கொண்டார். மாடியில் இருந்து விழுந்த பூனை அதிர்ஷ்டவசமாக இவர்கள் விரித்த துணியில் விழுந்தது. இதனால் அந்த பூனை காயம் ஏதுமின்றி தப்பியது.
இந்த காட்சிகளை குடியிருப்பில் வசித்த சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரப்பினர். இது துபாய் முழுவதும் வைரலாக பரவியது.
மாடியில் இருந்து விழுந்த பூனையை உயிருடன் மீட்டவர்களுக்கு பாராட்டும் குவிந்தது.
கேரளாவை சேர்ந்தவர்கள் பூனையை மீட்ட காட்சிகள் துபாய் நாட்டின் துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் கவனத்திற்கும் சென்றது. அவரும் பூனையை மீட்ட 2 மலையாளிகள் மற்றும் பாகிஸ்தானியர்களை பாராட்டினார்.
மேலும் தனது உதவியாளர் மூலம் பூனையை மீட்ட 4 பேருக்கும் தலா ரூ.10 லட்சம் (இந்திய ரூபா) பரிசும் வழங்கினார்.