அபாயத்தில் கொரோனா தடுப்பு செயலணி!

நேற்றைய கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் பின்னர், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அமைச்சர் டளஸ் அழகபெரும, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரை சந்தித்ததாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

டளஸ் அழகபெரும மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர், பந்துல குணவர்தனவுடன் இணைந்து தேநீர் அருந்தியுள்ளதாக தெரிய வருகின்றது.

தேநீர் அருந்தும் சந்தர்ப்பத்தில் முகக் கவசத்தை அப்புறப்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.

எனினும், சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே முகக் கவசத்தை அப்புறப்படுத்தவில்லை எனவும், தேநீர் அருந்தவில்லை எனவும் தெரிய வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தனர்.

சந்திப்பின்போது, பந்துல குணவர்தனவிற்கு அருகில், கெஹெலிய ரம்புக்வெல மற்றும் டளஸ் அழகபெரும ஆகியோர் அமர்ந்திருந்தமை, ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட படத்தில் உறுதியாகியது.

இந்த நிலையில், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ரெபிட் அன்டிஜன் பரிசோதனை செய்துள்ளதாகவும், அவருக்கு தொற்று உறுதியாகவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில், பந்துல குணவர்தனவுடன் தேநீர் அருந்திய டளஸ் அழகபெரும மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர் தம்மை சுய தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *