இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருமானம் மேலும் வீழ்ச்சி!

இலங்கைக்கு அதிக வெளிநாட்டு வருமானத்தைப் பெற்றுத்தரும் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து இந்த வருடம் ஜுலை மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருமானம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜுலை மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து 453.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

மத்திய வங்கி வட்டாரத் தகவல்களுக்கு அமைய இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அனுப்பப்பட்ட 702.1 மில்லியனுடன் ஒப்பிடும்போது 35% குறைவு எனத் தெரிய வந்துள்ளது.

ஜூன் மாதத்தில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து 478 மில்லியன் டொலர்களும், மே மாதத்தில் 460 மில்லியன் டொலர்களும் கிடைத்துள்ளன.

கடந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுக்கான மொத்த பணவரவு 2,407 மில்லியன் டொலர்களாகும். இது 2021 மே மாத இறுதியில் கிடைத்த 2,846 மில்லியன்களுடன் ஒப்பிடும்போது 18% வளர்ச்சியை காட்டுகிறது.

எனினும், ஜூன் மாதத்தில் கிடைத்த குறைந்தளவிலான பண வரவுடன், 2021ஆம் ஆண்டின் முதல் பாதியின் முடிவில் மொத்த தொகை 3,324 மில்லியன் டொலர்களாக காணப்பட்டதோடு, இது 2020 முதல் பாதியின் 2,980 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடும்போது 11.6% வளர்ச்சிய காண்பிக்கின்றது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில், முதல் ஏழு மாதங்களில் மொத்த வருவாய் 3,777 மில்லியன் டொலர்களாகும், எனினும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3,682 மில்லியன் டொலர்களாக காணப்பட்டதோடு இது 2.6% குறைவாகும்.

2018 உடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டில் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 4.4% குறைந்து 6.7 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது. அதேவேளை, 2020 ஆம் ஆண்டில் பணம் அனுப்பப்படுவது 5.8% அதிகரித்து 7.1 பில்லியன் டொலர்களாக அமைந்திருந்தது.

இந்த நிலையில், 2021 நிறைவுக்குள் வெளிநாட்டு பணம் 8 பில்லியன் டொலர்களை எட்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

பல சர்வதேச எல்லைகள் மூடப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள் காத்திருக்கும் காலம் அதிகரித்துள்ளது.

மேலும், இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கான முறையான செயற்பாடுகளின் பயன்பாடு அதிகரித்ததோடு, குடும்பங்கள் தொற்று நோய் அச்சுறுத்தலால் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்ததால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமது குடும்பத்திற்கு அனுப்பிய பணத்தின் அளவு அதிகரித்தமை இந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்ததாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறெனினும், முறையான வங்கி முறைக்கும் உத்தியோகபற்றற்ற சந்தையால் வழங்கப்படும் பரிமாற்ற விகிதங்களுக்கும் இடையே உள்ள கூர்மையான வேறுபாடு காரணமாக, புலம்பெயர் தொழிலாளர்கள் பணத்தை மாற்றுவதற்கான மோசடி வழிகளை நாட வழிவகுத்துள்ளமையால், இந்த வளர்ச்சி நிலைமையில் ஏப்ரல் முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ள பல நாடுகளில் தடுப்பூசி வழங்குதல், கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையைக் குறைத்துள்ளதாகவும், இது பண வரவுகள் குறைவதற்கு வழிவகுத்துள்ளதாகவும் பொருளாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *