மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் முடக்க நிலைமை நீடிக்கும்!

நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுபாடுகளை மக்கள் பின்பற்றி செயல்படாத பட்சத்தில் அதனை தொடர்ந்தும் நீடிக்க வேண்டிவரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுகின்றது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில் நாட்டில் பெரும்பாலான வாகனங்கள் வீதிகளில் செல்வதை காணக்கூடியதாக இருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பயண கட்டுபாடுகளை விதிப்பதின் ஊடாக சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுகின்ற போதிலும், அரசாங்கம் அதனை அமுல்படுத்தியுள்ளதாக வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவிக்கின்றார்.

இந்தநிலையில் பயணக் கட்டுப்பாடுகளை முறையாக செயல்படுத்துவதற்கு, பொலிசார் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு ஒத்துழைப்பினை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன்படி பயணக் கட்டுப்பாடுகளை மேலும் நீடிப்பதற்கு இடமளிக்காது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் விடயத்தில் நாடு மிகவும் மோசமான நிலையினை எட்டியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை நாட்டின் தற்போதைய நிலையில் சுகாதார துறை ஊழியர்கள் கொரோனா தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைவசதிகளில் போதிய இடவசதியின்றி காணப்படுவதுடன் சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதனால் மனிதவளபற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *