பஞ்சத்தால் பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் மக்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி மடகாஸ்கர் உலகின் முதல் “பருவநிலை மாற்றப் பஞ்சத்தை” எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளது. நான்கு ஆண்டுகளாக மழையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் மோசமான பசி பட்டினியாலும், உணவுப் பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வறட்சி, மடகாஸ்கர் நாட்டின் தெற்கில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட விவசாய சமூகங்களை கடுமையாக பாதித்துவிட்டது, இதனால் அவர்கள் பூச்சிகளை வேட்டையாடி உண்டு உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

“இந்த பஞ்சம் போன்ற நிலைமைகள், பருவநிலையால் ஏற்படுகின்றன” என்று ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் ஷெல்லி தக்ரல் கூறினார்.

தற்போது சர்வதேச அளவில் 30,000 பேர் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பின்மையின் உச்ச நிலையில் (ஐந்தாவது நிலை) இருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது. மடகாஸ்கரில் அறுவடைக்கு முந்தைய பாரம்பரிய காத்திருப்பு காலத்தில் (பயிரை நடவு செய்த பின் அறுவடைக்கு காத்திருக்கும் காலம்) நுழைய இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கவலை நிலவுகிறது.

“இதுவரை காணப்படாத நிலை இது. இந்த மக்கள் பருவநிலை மாற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை. அவர்கள் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதில்லை. இருப்பினும் அவர்கள் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்கிறார்கள்,” என ஷெல்லி தக்ரல் கூறினார்.

அம்போசாரி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான ஃபாண்டியோவாவில் வாழும் குடும்பத்தினர், சமீபத்தில் அவர்கள் உண்ணும் வெட்டுக்கிளிகளை, பார்வையிட வந்த ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட குழுவிடம் காட்டினர்.

பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் மக்கள்

“என்னால் முடிந்தவரை பூச்சிகளை சுத்தம் செய்கிறேன், ஆனால் கிட்டத்தட்ட தண்ணீரே இல்லை” என நான்கு குழந்தைகளின் தாயான டமரியா கூறினார்.

“இதைத் தான் நானும் என் குழந்தைகளும் கடந்த எட்டு மாதங்களாக தினமும் சாப்பிட்டு வருகிறோம், ஏனென்றால் நாங்கள் சாப்பிட எதுவும் இல்லை, நாங்கள் விதைத்ததை அறுவடை செய்ய மழை இல்லை,” என கூறினார் டமரியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *