மீண்டும் புதிய மாற்றம் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாக தேரர் அறிவிப்பு!

“நாட்டை பாதுகாக்கும் மக்கள் குரல் அமைப்பின்” ஊடாக மீண்டும் புதிய மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அறிவித்துள்ளார்.

அபயராம விகாரையில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டைப் பாதுகாக்கும் மக்கள் குரல் அமைப்பு, ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலத்தில் உருவாக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு இந்த அமைப்பு பாரிய ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடு பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்தது. தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம் ஆகியவை பாரிய சவாலை எதிர்கொண்டிருந்தன.

நாட்டைப் பாதுகாத்து, நாடு முன்னேற்றமடைய வேண்டும் என கருதி தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கினோம். நாடு முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காக அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவு தோல்வியடைந்துள்ளது.

எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை. ஆகவே நாட்டை பாதுகாக்கும் மக்கள் குரல் அமைப்பு ஊடாக மீண்டும் புதிய மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கோவிட் தாக்கம் தீவிரமடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அபிவிருத்திப் பணிகளை இடைநிறுத்தி நாட்டு மக்களை பாதுகாக்கும் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள் என ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினோம்.

எமது ஆலோசனைகைளை ஆட்சியாளர்கள் கவனத்திற்கொள்ளவில்லை. ஜனாதிபதி சுபிட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தை எஞ்சியுள்ள காலத்தில் நிறைவேற்ற வேண்டுமாயின் முதலில் சிறந்த ஆலோசனை சபையை ஸ்தாபித்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதியை நெருக்கடிக்குள்ளாக்கும் தரப்பினரே அவருக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். மக்களின் வெறுப்பை அதிகரிக்கும் வகையிலேயே அரசாங்கத்தில் உள்ள ஒரு சில அமைச்சர்கள் செயற்படுகிறார்கள்.

அரசாங்கத்தின் தீர்மானங்கள் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்து விடக்கூடாது. கோவிட் தாக்கத்துக்கான நடவடிக்கைகள் கிராமிய மட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அனைத்து கிராமங்களிலும் சுகாதார குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும். அமைச்சர்கள் குறைந்தளவுக்கு கதைத்து திறம்பட செயற்பட வேண்டும். ஆளும் தரப்பில் உள்ள பெரும்பாலானோர் ஊடாக பிரச்சாரத்துக்காக தேவையற்ற வகையில் கருத்துரைக்கிறார்கள்.

இவர்களின் செயற்பாடும் மக்கள் அரசாங்கத்தை வெறுப்பதற்கான ஒரு காரணியாக அமைகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *