கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடுவந்த 15 வயது சிறுமி மரணம்!

புத்தளத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (23) இரவு திடீரென உயிரிழந்த சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

புத்தளம் மணல்குன்று பகுதியைச் சேர்ந்த முஹம்மது அமீர் பாத்திமா ருகைய்யா எனும் 15 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு இலக்கான குறித்த சிறுமி, மதுரங்குளி மேர்சி கல்வி வளாகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர் எனவும் அவர் சொன்னார்.

இவ்வாறு கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த சிறுமி உரிய நாட்கள் நிறைவடைந்து வீட்டுக்கு வந்த பின்னரே உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, உயிரிழந்த சிறுமியின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அச்சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது முறையாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த குறித்த சிறுமியின் ஜனாஸா உரிய சுகாதார முறைப்படி பொதி செய்யப்பட்டு புத்தளத்திலிருந்து குருநாகலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு,

அங்கிருந்து நல்லடக்கத்திற்காக ஓட்டமாவடிக்கு கொண்டு செல்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளதாகவும் புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *