கருணாநிதிக்கு ரூ.39 கோடியில் நினைவிடம்!

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டப்பேவரை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று, சட்டசபை விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது, “தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும்.

கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் கட்டப்பட உள்ளது.

இன்று நாம் பாக்கும் தமிழகம் கருணாநிதி உருவாக்கியது. 5 முறை முதல்வராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர்.

13 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் கருணாநிதி. தோல்வி அவரை தொட்டதே இல்லை, வெற்றி அவரை விட்டதே இல்லை. என் பாதை சுயமரியாதை, தமிழ்நெறி காக்கும் பாதை” எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது, “கலைஞருக்கு நினைவிடம் என்ற அறிவிப்பை மனதார வரவேற்கிறேன்.

சமுதாய சீர்திருத்த கருத்துகளுக்கு உதாரணம் ‘பராசக்தி’ பட வசனம். எனது தந்தை, கருணாநிதியின் தீவிர பக்தர்.

நாமெல்லாம் அண்ணாதுரை குடையின் கீழ் அரசியல் பாடம் கற்றவர்கள். அவர் பற்றிய அனைத்து சிறப்புகளும் நினைவிடத்தில் இடம்பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *