ஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்கள் மனைவி கூறிய புதிய தகவல்!

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்க படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அப்போது அவரது 4-வது மனைவி அமால் மற்றும் குழந்தைகள் அவருடன் உடன் இருந்தனர்.

அந்த நேர சம்பவம் தொடர்பாக அமால் ஏற்கனவே பேட்டி அளித்து இருந்தார். இப்போது எழுத்தாளர்கள் ஸ்காட் கிளார்க், அட்ரீயன் லெவி ஆகியோர் இணைந்து பின்லேடன் மரணம் தொடர்பாக புத்தகம் ஒன்று எழுதி உள்ளனர்.

அதில் பின்லேடன் மனைவி அமாலின் விரிவான பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன. அமால் அதில் கூறியிருப்பதாவது:-

மே 1-ந் தேதி இரவு உணவு முடிந்ததும், பாத்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன. வழக்கமான இரவு தொழுகைக்கு பிறகு நானும், பின்லேடனும் மாடியில் இருந்த படுக்கை அறைக்கு சென்றோம்.

இரவு 11 மணி அளவில் பின்லேடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அந்த நேரத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டது. பாகிஸ்தானில் அடிக்கடி மின்சாரம் தடைப்படும். எனவே நாங்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சற்று நேரத்தில் எனது மனதில் ஏதோ ஒரு கலக்கம் ஏற்பட்டது. எனது தூக்கம் முற்றிலும் கலைந்துவிட்டது. அந்த நேரத்தில் வீட்டின் அருகே சத்தம் கேட்டது. அது பிரமையாக இருக்கும் என்று கருதினேன்.

சிறிது நேரத்தில் மாடியில் யாரோ ஏறுவதுபோல தோன்றியது. எனவே எனக்கு பயம் ஏற்பட்டது. அதை உன்னிப்பாக கவனித்தேன். மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் யாரோ கடந்து போன நிழல் தெரிந்தது. இந்த நேரத்தில் சத்தங்கள் அதிகமானது.

அந்நியர்கள் யாரோ உள்ளே வந்துவிட்டார்கள் என்று கருதினேன். இந்த நேரத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த பின்லேடனும் திடுக்கிட்டு எழுந்தார். அவர் முகத்தில் கலவரம் தெரிந்தது.

அந்த நேரத்தில் எங்களை யாரோ உற்று பார்ப்பதையும், மேலே ஆட்கள் ஓடுவதையும் உணர்ந்தேன். சட்டென்று நாங்கள் இருவரும் அங்கிருந்து எகிறி குதித்து ஓடினோம். பால்கனி அருகே இருந்த கதவின் வழியாக பார்த்தோம். அப்போது அமெரிக்காவின் ஹெலிகாப்டர் வீட்டின் அருகே நின்றிருந்தது.

சிறிது நேரத்தில் மற்றொரு ஹெலிகாப்டரும் அங்கு வந்தது. பின்லேடனின் மற்ற மனைவிகளும், குழந்தைகளும் 2-வது மாடியில் இருந்தனர். அவர்களும் கீழே வந்தார்கள். யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

நாங்கள் பயப்பட்டோம். அப்போது பின்லேடன் அவர்கள் என்னைத்தான் கொல்ல விரும்புகிறார்கள். உங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று கூறினார்.

மனைவிகளையும், குழந்தைகளையும் வீட்டின் கீழ் தளத்திற்கு செல்லும்படி கூறினார். நான் அருகிலேயே அமர்ந்திருந்தேன்.

சிறிது நேரத்தில் அமெரிக்க வீரர்கள் பால்கனிக்கு வந்து விட்டனர். குழந்தைகள் அழுதனர். நான் அவர்களை சமாதானப்படுத்தினேன். அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *